செய்திகள்

பஸ் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் - டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. அறிக்கை

Published On 2018-01-22 00:12 GMT   |   Update On 2018-01-22 00:12 GMT
பஸ் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran #ADMK
சென்னை:

பஸ் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சாமானியர்கள், எளியோர் பயன்படுத்தும் அரசு பஸ்களின் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நிதி நெருக்கடியால் தான் இந்த கட்டண உயர்வு என்று ஆட்சியாளர்கள் கூறுவதை ஏற்க முடியாது. சேவை நோக்கத்தோடு இயங்கும் போக்குவரத்து கழகங்களின் அடிப்படையையே சிதைத்து தாங்க முடியாத சுமையை மக்கள் தலையில் தூக்கி வைத்துவிட்டதன் மூலம் தங்களின் நிர்வாக திறமையின்மையை இந்த மக்கள் விரோத அரசு வெளிக்காட்டி உள்ளது.

போக்குவரத்து கழகத்தின் நிதி நெருக்கடியை போக்க மாற்று வழியை கண்டறியாமல் மக்களை வஞ்சித்துள்ள இந்த அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

எடப்பாடி பழனிசாமியின் அரசு இன்று மக்களுக்கு துரோகம் புரிந்ததன் மூலம், துரோகம் தங்கள் அடிப்படை குணம் என்பதை நிரூபித்து உள்ளது. எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்தோடு, உயர்த்தப்பட்ட எனது சம்பளத்தை நான் பெறப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளேன்.

எம்.எல்.ஏ.க்கள் மட்டும் தமிழக பிரஜைகள் போலவும், பொதுமக்கள் இந்த அரசுக்கு தேவையற்றவர்கள் போலவும் நடந்துகொண்ட இந்த சுயநல, மக்கள் விரோத ஆட்சிக்கு வருங்காலத்தில் தமிழகம் உரிய பாடத்தை புகட்டத்தான் போகிறது.

பஸ் கட்டணத்தை உயர்த்திய அரசுக்கு தமிழக மக்களின் சார்பாக கண்டனத்தை தெரிவித்தும், உயர்த்திய பஸ் கட்டணத்தை உடனடியாக திரும்பப்பெறவும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #TTVDhinakaran #ADMK #tamilnews
Tags:    

Similar News