செய்திகள்

கட்டண உயர்வு எதிரொலி: ரெயில் பயணத்துக்கு மாறும் பயணிகள்

Published On 2018-01-21 05:50 GMT   |   Update On 2018-01-21 05:50 GMT
பஸ் கட்டண உயர்வு பயணிகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதனால் மின்சார ரெயில் வழித்தடங்களை ஒட்டி இருப்பவர்கள் பஸ் பயணத்தை தவிர்க்க தொடங்கி இருக்கிறார்கள். #BusFareHike
சென்னை:

பஸ் கட்டண உயர்வு பயணிகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. சாதாரண மக்களுக்கு இந்த கட்டண உயர்வு பெரும் சுமையாக அமைந்துள்ளது.

சென்னை வாசிகளை பொறுத்தவரை மின்சார ரெயில்தான் இப்போது கைகொடுக்கிறது. ஒரு இடத்துக்கு சென்றுவர பஸ் கட்டணம் ரூ.50 செலவானால் ரெயில் கட்டணம் வெறும் 10 ரூபாய்தான்.

எனவே மின்சார ரெயில் வழித்தடங்களை ஒட்டி இருப்பவர்கள் பஸ் பயணத்தை தவிர்க்க தொடங்கி இருக்கிறார்கள். மேலும் குறிப்பிட்ட தூரம் வரை ரெயிலில் சென்று விட்டு அங்கிருந்து பஸ்மாறி செல்கிறார்கள். அப்படி போனாலும் பணம் மிச்சப்படுவதாக கூறினார்கள். மின்சார ரெயில்களில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வழக்கமாக கூட்டம் இருக்காது. ஆனால் இன்று கூட்டம் அலைமோதியது. அனைத்து ரெயில் நிலையங்களில் டிக்கெட் வாங்க நீண்ட வரிசையும் காணப்பட்டது.


ரெயில் பயணத்தை நாடிவந்தவர்களிடம் கேட்ட போது, இனி முடிந்தவரை ரெயில் பயணம் மேற்கொள்ள விருப்பதாக தெரிவித்தனர். சில பயணிகள் கூறியதாவது:-

நான் அடிக்கடி வேலை விசயமாக எழும்பூரில் இருந்து தாம்பரம், கூடுவாஞ்சேரி பகுதிகளுக்கு சென்று வருவேன். ரெயில் நிலையம் வரை நடந்து செல்லவும், வரிசையில் நின்று டிக்கெட் வாங்கவும் சோம்பல் பட்டு பஸ்சில் செல்வேன்.

நேற்று முன்தினம் வரை கூடுவாஞ்சேரிக்கு ரூ.14 தான் கட்டணம். இப்போது ரூ.28 ஆகிவிட்டது. ரெயில் கட்டணம் வெறும் 10 ரூபாய்தான். மிச்சப்படும் பணத்தில் மதிய சாப்பாட்டை முடித்துவிடலாம்.

தாம்பரத்தில் இருந்து பல்லாவரத்துக்கு பஸ் கட்டணம் ரூ.20. ரெயில் கட்டணம் ரூ.5 தான். எனவே ரெயில் பயணத்தை தேர்வு செய்தேன்.

பஸ் கட்டணத்தை அநியாயத்துக்கு உயர்த்தி இருக்கிறார்கள். எந்த துறையை கேட்டாலும் 500 கோடி, 100 கோடி நஷ்டம் என்கிறார்கள். அப்போ, எப்படி திட்டம் போட்டு செயல்படுகிறார்கள்? திட்டம் போடுவது சரியில்லையா?

மக்களிடம் இருந்து பணத்தை பிடுங்குவதில் மட்டுமே குறியாக இருக்கும் அரசு, அனைத்து துறைகளையும் சீர்படுத்துவதில் அக்கறை காட்டினால் போதும்.

பிரேம், சரண்யா (அண்ணன், தங்கை):

எழும்பூரில் இருந்து தாம்பரத்துக்கு பஸ் கட்டணம் ரூ.30. ஆனால் ரெயில் கட்டணம் ரூ.10 தான். சென்று திரும்ப ரெயில் கட்டணம் 20. பஸ் கட்டணம் ரூ.60.

ரூ.40 மிச்சப்படுவதால் ரெயிலில் செல்லவந்ததாக கூறினார்கள்.

எழும்பூர் ரெயில் நிலையத்தில் டிக்கெட் வாங்க கூட்டம் அதிகமாக இருந்தது. எனவே பிரேம் வரிசையில் நின்றார்.

அதற்குள் சரண்யா தனது செல்போனில் ரெயில்வே ‘ஆப்-ஐ’ பதிவிறக்கம் செய்து ஆன்-லைன் மூலம் டிக்கெட்டை எடுத்துவிட்டார். பின்னர் வரிசையில் நின்ற தமையனை அழைத்து ரெயிலில் ஏற சென்றார்.

சென்னை வாசிகள் இந்த மாற்று வழியை பயன்படுத்தி கொள்கிறார்கள். ஆனால் இந்த வசதி புறநகரில் இல்லை. எனவே வெளிமாவட்டங்களில் இருப்பவர்கள் பஸ் கட்டணத்தையும் சேர்த்து சுமந்தே ஆக வேண்டும்.

சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு எக்ஸ்பிரஸ் ரெயிலில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதியுடன் செல்ல ரூ.410 தான் கட்டணம். ஆனால் பஸ் கட்டணம் ரூ.790. இதில் பயண நேரமும் அதிகம். இருக்கை வசதியும் சரியிருக்காது. எனவே தொலைதூரங்களுக்கு செல்பவர்களும் இனி ரெயில் பயணத்தையே விரும்புவார்கள். #TamilNews
Tags:    

Similar News