செய்திகள்

காவேரிப்பட்டணம் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை: மாற்றுத்திறனாளி அடித்து கொலை

Published On 2018-01-20 13:21 GMT   |   Update On 2018-01-20 13:21 GMT
காவேரிப்பட்டணம் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தததால் மாற்றுத்திறனாளி அடித்து கொலை செய்யப்பட்டார்.

சேலம்:

கிருஷ்ணகிரி காவேரிப்பட்டணம் அருகே உள்ள திம்மபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வேடியப்பன் (வயது 45). விவசாயி. இவர் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி.

இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அவரது மனைவி 2 வருடங்களுக்கு முன்பு வேடியப்பனை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் 2 குழந்தைகளையும் வளர்த்து வந்தார்.

காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவர் ரமணன்.கூலித் தொழிலாளி. இவரது மனைவி பசவம்மாள். இருவரும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் ஆவார்.

வேடியப்பனும், ரமணனும் நண்பர்கள். எனவே அவரை அடிக்கடி சந்தித்து பேசும்போது ரமணனின் மனைவியுடன் வேடியப்பனுக்கு பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கத்தின் காரணமாக பசவம்மாளிடம் இருவரும் வீட்டை விட்டு சென்றுவிடலாமா? என்று வேடியப்பன் கேட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த பசவம்மாள் தனது கணவர் ரமணனிடம் நடத்த சம்பவத்தை பற்றி கூறினார். இதுகுறித்து உடனே அவர் வேடியப்பனிடம் சென்று தட்டிக்கேட்டார்.

அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் இருவரும் பயங்கரமாக மாறிமாறி தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் வேடியப்பன் படுகாயம் அடைந்தார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் வேடியப்பனை மீட்டு காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேடியப்பன் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews

Tags:    

Similar News