செய்திகள்

பஸ் கட்டணத்தை விட ரெயில் கட்டணம் மிகவும் குறைவு

Published On 2018-01-20 09:12 GMT   |   Update On 2018-01-20 09:12 GMT
மாநகர பஸ்களில் செல்பவர்களும், நீண்ட தூரம் செல்பவர்களும் பஸ் கட்டண உயர்வால் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி இருப்பதால், இனி மக்கள் ரெயில்களில் அதிகமாக செல்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

சென்னை:

தமிழ்நாடு முழுவதும் பஸ்களின் கட்டணம் உயர்த்தப்பட்டதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மாநகர பஸ்களில் செல்பவர்களும், குறைந்த தூரம் செல்பவர்களும், நீண்ட தூரம் செல்பவர்களும் பஸ் கட்டண உயர்வால் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி இருக்கிறார்கள்.

பஸ்சில் பயணம் செய்வதை விட ரெயில்கள் கட்டணம் மிகக் குறைவாகும்.

மாநகர பேருந்துகளில் சாதாரண பஸ்சின் (ஒயிட் போர்டு) குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.6 ஆகும். ஆனால் மின்சார ரெயில்களில் குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.5தான். சென்னை எழும்பூரில் இருந்து பழவந்தாங்கல் வரை ரெயிலில் செல்ல கட்டணம் ரூ.5தான். அதே தூரத்துக்கு பஸ்சில் சென்றால் 4 மடங்கு அதிகமாக செலுத்த வேண் டும். டீலக்ஸ் பஸ்களில் கட்டண உயர்வு மிகவும் அதிகமாகும்.

சென்னையில் இருந்து நெல்லைக்கு அல்ட்ரா டீலக்ஸ் பஸ்சில் செல்ல முன்பு ரூ.440 கட்டணம் இருந்தது. ஆனால் தற்போது ரூ.255 அதிகரித்து ரூ.695 கட்டணமாக இருக்கிறது.

ஆனால் சென்னையில் இருந்து நெல்லைக்கு ரெயிலில் செல்ல ரூ.385 (2-ம் வகுப்பு படுக்கை வசதி) தான் கட்டணம். பஸ்சில் கூடுதலாக ரூ.310 செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது.

இதேபோல மதுரைக்கு பஸ்சில் செல்ல தற்போதைய அல்ட்ரா டீலக்சில் கட்டணம் ரூ.515 ஆகும். ஆனால் ரெயிலில் ரூ.315 கட்டணத்தில் சென்று விடலாம். ரூ.200 கூடுதாக பஸ்சில் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பஸ் கட்டண உயர்வால் இனி மக்கள் ரெயில்களில் அதிகமாக செல்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஏற்கனவே ரெயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. இனிவரும் காலங்களில் ரெயிலில் டிக்கெட் கிடைப்பது மிகவும் கடினமாக இருக்கும். #tamilnews

Tags:    

Similar News