செய்திகள்

நகராட்சி நெடுஞ்சாலைகளில் 500 மதுக்கடைகள் திறக்க ஏற்பாடு: ‘டாஸ்மாக்’ அதிகாரி தகவல்

Published On 2018-01-20 03:14 GMT   |   Update On 2018-01-20 03:14 GMT
சுப்ரீம் கோர்ட்டு அனுமதியை அடுத்து நகராட்சி நெடுஞ்சாலைகளில் 500 மதுக்கடைகளை திறக்க ‘டாஸ்மாக்’ நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. #Tasmac
சென்னை:

நகராட்சி நெடுஞ்சாலைகளில் மதுபான கடைகள் திறக்க தடை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த 15-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள நகராட்சி நெடுஞ்சாலைகளில் 500 மதுபான கடைகளை திறக்க ‘டாஸ்மாக்’ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ‘டாஸ்மாக்’ அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு அனுமதியை தொடர்ந்து நகராட்சி நெடுஞ்சாலைகளில் 500 மதுக்கடைகளை திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கடைகளை அமைப்பதற்கான இடங்களும் தேர்வு செய்யப்பட்டு விட்டன.

சென்னை ஐகோர்ட்டில் உள்ள தடை விலகியவுடன் 500 மதுக்கடைகளும் திறக்கப்படும்.

‘டாஸ்மாக்’ மதுபான கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு சோதனை நடத்தப்பட்டது.

அப்போது கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த 200 ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மதுபான விலையுடன் கூடுதலாக ரூ.10 விலை வைத்து விற்பனையில் ஈடுபடும் ஊழியர்களை, விற்பனை குறைவாக நடைபெறும் மதுக்கடைகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

‘டாஸ்மாக்’ பார் உரிமத்துக்கான டெண்டர் ஒவ்வொரு மாவட்டமாக சுமுகமாக நடைபெற்று வருகிறது.

பொங்கல் பண்டிகை அன்று ரூ.138 கோடிக்கும், காணும் பொங்கல் அன்று ரூ.124 கோடிக்கும் என இந்த ஆண்டு ரூ.262 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் அனைத்திலும் ரசீது வழங்குவதற்கான மிஷின் உள்ளது. கூட்ட நெரிசல் காரணமாக ரசீது வழங்குவதில் சிரமம் உள்ளது. கட்டாயம் ரசீது தேவைப்படுபவர்கள் வாங்கி கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார். #Tasmac #tamilnews
Tags:    

Similar News