செய்திகள்

தனிக்கட்சி தொடங்க ரஜினிகாந்த் தீவிரம் - ரசிகர்மன்ற தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம்

Published On 2018-01-17 06:19 GMT   |   Update On 2018-01-17 08:13 GMT
ரஜினிகாந்த் தனக்கு நம்பிக்கையுள்ள சிலரைக் கொண்டு ஒரு குழுவை அமைத்துள்ளார். இந்த குழுவினர் தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களுக்கும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். #rajinikanth #TNPolitics
ரஜினியும், கமல்ஹாசனும் போட்டிப் போட்டுக் கொண்டு மக்களுக்கு சேவை செய்ய வர உள்ளதால், தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

இருவருமே இன்னமும் தங்களது புதியக் கட்சிக்கு பெயர் சூட்டவில்லை. கொள்கைகளை அறிவிக்கவில்லை. மாநில, மாவட்ட நிர்வாகிகளையும் கூட அவர்கள் இருவரும் நியமிக்கவில்லை.

புதிய அரசியல் கட்சி தொடங்கப் போகிறோம் என்று அவர்கள் இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டு பிறகு அமைதியாகி விட்டனர். இதனால் ரஜினி, கமல் இருவரது அரசியல் நடவடிக்கைகளில் சற்று தொய்வு ஏற்பட்டிருப்பதாக பேச்சு எழுந்தது. இதை புரிந்து கொண்ட இருவரும் மீண்டும் வீறுகொண்டு எழுந்து விறுவிறுப்பாக அரசியல் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளனர்.

இதையடுத்து முதலில் அரசியல் கட்சியைத் தொடங்கப் போவது ரஜினியா? கமலா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதற்கு விடை தெரியத் தொடங்கியுள்ளது. நடிகர் கமல்ஹாசன், ரஜினியை முந்திக்கொண்டு, அடுத்த மாதம் (பிப்ரவரி) 21-ந்தேதி புதிய கட்சிப் பெயரை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்.



தனது பூர்வீக ஊரான பரமக்குடியில் அவர் தன் கட்சிப் பெயரை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு கமல்ஹாசன், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை என்று ஊர், ஊராக சென்று மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். நாளை (வியாழக்கிழமை) கமல்ஹாசனின் முழு சுற்றுப்பயண விபரமும் தெரிந்து விடும்.

கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்ட நிலையில், தற்போது அனைவரது கவனமும் நடிகர் ரஜினிகாந்த் பக்கம் திரும்பியுள்ளது. ஆனால் ரஜினியை பொருத்தவரை அவர் தனது புதிய கட்சிப் பெயர் மற்றும் நிர்வாகிகள் நியமனம் வி‌ஷயத்தில் எந்தவித அவசரமும் காட்டவில்லை. அரசியல் களத்தின் முழு நிலவரத்தையும் நன்கு அலசி, ஆராய்ந்து தெரிந்து கொண்டு அதன்பிறகு தனது கட்சிக்கு பெயர் சூட்ட அவர் நினைப்பதாக தெரிகிறது.

இதற்கான களப்பணிகளை ரஜினிகாந்த் ஏற்கனவே தொடங்கி விட்டார். அரசியலில் இருந்து விலகியுள்ள மூத்த அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், நட்பாக உள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் நண்பர்களை சந்தித்து அவர் பேசி வருகிறார். ஒவ்வொருவரும் தெரிவிக்கும் ஆலோசனைகளை மிகவும் உன்னிப்பாகக் கேட்டுக் கொள்ளும் ரஜினி, அதன் அடிப்படையில் தனது அரசியல் கட்சியின் உள் கட்டமைப்பை வலுவாக்க திட்டமிட்டுள்ளார்.

இதன் முதல் கட்டமாக ரஜினி தனக்கு மிக, மிக நம்பிக்கையுள்ள சிலரைக் கொண்டு ஒரு குழுவை அமைத்துள்ளார். இந்த குழுவினர் தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களுக்கும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். ஒவ்வொரு மாவட்டம் பற்றியும் ரஜினி ஏற்கனவே திரட்டி வைத்துள்ள தகவல்களுக்கு ஏற்ப இந்த குழு செயல்படும்.

தற்போது தமிழகத்தில் உள்ள சுமார் 60 ஆயிரம் ரஜினி மன்றங்கள் முறையான நிர்வாகிகள் இல்லாமல் உள்ளது. எனவே அந்த ரஜினி மன்றங்களுக்கு புதிய நிர்வாகிகளை ரஜினியின் குழு நியமனம் செய்யும். அந்த நிர்வாகிகள் மூலம் ரஜினி மன்றத்துக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணியை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ரஜினி மன்றத்தின் செயல்பாடுகளை தீவிரப்படுத்த 32 மாவட்டங்களையும் 60 மாவட்டங்கள் போல பிரித்து செயல்படவும் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் முதல் கட்டமாக 1 கோடி தொண்டர்களை உறுப்பினர்களாக சேர்க்க ரஜினி இலக்கு நிர்ணயித்துள்ளார்.

அவரது இந்த வியூகத்தை அவரது பிரத்யேகக் குழு வேலூர் மாவட்டத்தில் இருந்து தொடங்கும் என்று தெரிய வந்துள்ளது. இந்த குழுவினர் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளை அரசியல் கட்சியின் கிளைக் கழக நிர்வாகிகளாக மாற்றுவதற்கான உள்கட்டமைப்பு பணியை செய்யும்.

குறிப்பாக தற்போது ரசிகர் மன்ற நிர்வாகிகளாக இருக்கும் தீவிர ரசிகர்களில் யார்-யாரை இளைஞர் அணி, வக்கீல் அணி, மகளிர் அணி, தொழிலாளர் அணி, மாணவர் அணிக்கு என பிரிப்பது என்பதை இந்த குழு செய்து முடிக்கும். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கட்சிப் பணியை முன்னெடுத்துச் செல்ல 3 அல்லது 4 முக்கிய நிர்வாகிகளையும் ரஜினியின் குழு நியமனம் செய்யும். இந்த மாவட்ட நிர்வாகிகள் கட்சியின் கிளைக் கழக நிர்வாகிகளுக்கும் ரஜினிக்கும் பாலமாக இருப்பார்கள்.

இதற்கிடையே ரஜினி மன்றங்களுக்கு ஆன்-லைன் மூலமாகவும் தீவிரமாக உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. கடந்த இரு வாரங்களில் சுமார் 10 லட்சம் பேர் ரஜினி மன்றத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். அவர்களை மாவட்ட வாரியாக பிரிக்கும் பணி நடந்து வருகிறது.

ஆன்-லைனில் பதிவு செய்திருப்பவர்களில் திறமைசாலிகளுக்கு மாநில, மாவட்ட அளவில் பொறுப்புகள் வழங்க ரஜினி முடிவு செய்துள்ளார். ஆனால் இது தொடர்பான தகவல்கள் வெளிவர சற்று தாமதமாகும் என்று கூறப்படுகிறது.

தற்போது ரஜினி உருவாக்கியுள்ள குழு நியமிக்கும் நிர்வாகிகள் தற்காலிகமாகத்தான் பதவியில் இருப்பார்கள். உறுப்பினர்களை சேர்ப்பதுதான் அவர்களது முக்கிய பணியாக கொடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சித் தொடங்கப்பட்டதும் இந்த நிர்வாகிகளுக்கு முக்கிய பதவிகள் கொடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது மாவட்ட ரீதியாக நியமிக்கப்படும் நிர்வாகிகளில் யார்-யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ, அவர்களுக்கு நல்ல பதவிகளையும், முக்கிய பொறுப்புகளையும் கொடுக்க ரஜினி தீர்மானித்துள்ளார். குறிப்பாக ஒவ்வொரு மாவட்டம் சார்பில் 5 லட்சம் பேரை உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அப்படி 5 லட்சம் பேரை சேர்க்க முடியாதவர்கள் மற்ற திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கொடுக்க வழி விடும்படி அறிவுறுத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த ரஜினி மன்ற நிர்வாகிகள் தீவிரமாகியுள்ளனர்.

இதனால் ரஜினியின் புதிய கட்சி தொடங்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

ரஜினியின் குழு அமைக்கும் நிர்வாகிகள் பணி நிறைவு பெற ஓரிரு மாதங்கள் ஆகும். அதன் பிறகே கட்சிக்கான உள்கட்டமைப்பு வேலைகள் நடக்கும். எனவே ரஜினியின் கட்சிப் பெயர் மற்றும் நிர்வாகிகள் விபரம் ஏப்ரல் மாதம் தான் தெரியும் என்று கூறப்படுகிறது.

ஆனால் ரஜினி, கமல் இருவருமே அரசியல் களத்தில் எடுபட மாட்டார்கள் என்று அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். எம்.ஜி.ஆர். அரசியலில் தொட்ட உச்சத்தை நிச்சயமாக ரஜினி, கமல் இருவராலும் தொட முடியாது என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது. #rajinikanth #TNPolitics #tamilnews
Tags:    

Similar News