செய்திகள்

ஆளுநர் உரையை பட்ஜெட் போல நினைத்து ஸ்டாலின் பேசி உள்ளார் - முதல்வர் பழனிச்சாமி

Published On 2018-01-12 08:44 GMT   |   Update On 2018-01-12 08:44 GMT
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் இன்றுடன் முடிய உள்ளதையடுத்து, பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் உரையை பட்ஜெட் போல நினைத்து ஸ்டாலின் பேசியுள்ளார் என கூறினார்.

சென்னை:

தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. இந்த கூட்டத்தொடரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி தொடங்கி வைத்தார். கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தற்கு பதிலளித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஆளுநர் உரையை பட்ஜெட் போல நினைத்து ஸ்டாலின் பேசி உள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில் ஆளுநர் உரையில் புதிய திட்டம் அறிவிக்க வேண்டியதில்லை. தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். இந்தாண்டு இறுதியில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும். சென்னை காமராஜர் சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசு சார்பில் எம்ஜிஆர் நினைவு வளைவு அமைக்கப்படும். சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் விரிவான திட்ட அறிக்கை கிடைத்த பின் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்படும். 

தமிழகத்தில் 1,599 பள்ளிகள் பல்வேறு விதங்களில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் கடன் விகித அளவு கட்டுக்குள்தான் உள்ளது, திட்டங்களுக்கான நிதி குறைக்கப்படவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட ரப்பர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.68 லட்சம் மதிப்பீட்டில் குளிர்பதன சேமிப்பறை கட்டப்படும். புயலின்போது காணாமல் போன மீனவர்களில் கடைசி மீனவரை மீட்கும் வரை தேடுதல் பணி தொடரும்.

தமிழக மாணவர்களை பாதிக்கும் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பை தெரிவிக்கும். 
சர்க்கரை ஆலைகளுக்கான மாநில அரசின் பங்கை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுச்சூழல் விதிகளிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும். ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
Tags:    

Similar News