செய்திகள்

பொங்கல் இலவச பொருள் கட்டாயம் வழங்கப்படும்: முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதி

Published On 2018-01-02 09:18 GMT   |   Update On 2018-01-02 09:18 GMT
பொங்கல் பண்டிகைக்கு புதுவையில் இலவச பொருட்கள் கட்டாயமாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதி அளித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை முதல் அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

2017-ல் பல சோதனைகளுக்கிடையில் மத்தியில் மாற்று அரசு இருந்தாலும் மக்களுக்கு சேவையாற்றி வந்துள்ளோம். மக்கள் நல திட்டங்களுக்கான முட்டுக்கட்டுகளை அகற்றி வந்துள்ளோம்.

புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் வரலாறு காணாத வகையில் சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர். அவர்கள் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் இருக்க தேவையான ஏற்பாடுகளை அரசு செய்திருந்தது.

புதுவையில் சட்டம்- ஒழங்கு கட்டுப்பாட்டில் உள்ளதால் சுற்றுலா வளர்ச்சி பெற்று வருகிறது. சுற்றுலா மூலம் வருவாயும் பெருகியுள்ளது. அரசுடன் மாற்று சிந்தனை இருந்தாலும், பாதுகாப்பு வி‌ஷயத்தில் அரசுடன் இணைந்து கவர்னர் கிரண்பேடி பணியாற்றினார். அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.

முத்தலாக் விவகாரம் தொடர்பான சட்டம் எந்தவித முன்அறிவிப்பும் இன்றி, சம்பந்தப்பட்டவர்களின் ஆலோசனையும் பெறாமல் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அள்ளித்தெளித்த கோலம் போல கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தை பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கும். இதை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்.

தமிழகத்தில் அ.தி.மு.க.வில் நிலவும் குழப்பத்தை முன்வைத்து கட்சி தொடங்கும் அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். அரசியல் கட்சியை யார் வேண்டுமானாலும் தொடங்கலாம். அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். பல நடிகர்கள் கட்சி தொடங்கி உள்ளனர். வெற்றியும், தோல்வியும் பெற்றுள்ளனர். அரசியலுக்கும், ஆன்மிகத்திற்கும் சம்பந்தமில்லை. ஆனால் ரஜினி ஆன்மிகத்தையும், அரசியலையும் சேர்த்துள்ளார். ரஜினியின் பேட்டியில் இன்னும் தெளிவான வி‌ஷயங்கள் இல்லை. இதற்கு காலம் தான் பதில் சொல்லும். தமிழகத்தில் மதவாத கட்சிகள் வேரூன்ற முடியாது.

சரக்கு சேவை வரியை நடைமுறைப்படுத்துவதில் பல குழப்பம் உள்ளது. அதில் தற்போது வருமானம் வர தொடங்கியுள்ளது. ஆனால் நமக்கான வருமானம் என்ன? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக மத்திய அரசிடம் நகல் கேட்டுள்ளோம்.

பொங்கலுக்கு புதுவையில் இலவச பொருட்கள் கட்டாயமாக வழங்கப்படும். இதற்கான நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. எங்கள் அரசு விதிமுறைக்கு உட்பட்டே செயல்படுகிறது. முதல்- அமைச்சரும், அதிகாரிகளும் வரையறுக்கப்பட்ட அதிகாரத்திற்குள் செயல்படுகிறோம். நேரடியாக அரசின் பணிகளில் தலையிட கவர்னருக்கு அதிகாரம் இல்லை. தேவைப்பட்டால் எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்துத்தான் துறை செயலாளரிடம் கவர்னர் விளக்கம் கேட்க முடியும்.

இதுவரை கவர்னரின் அதிகாரம் குறித்து 15 கடிதம் எழுதியுள்ளோம். ஆனால் அவர் அரசின் ரகசியங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். தணிக்கை அறையில் கூடங்குளம் அணுமின் திட்டத்தால் ரூ.1000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தணிக்கை அறிக்கை இறுதியானது அல்ல. இதுபோலவே 2-ஜி தொடர்பாக தணிக்கை அறிக்கையில் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு என குறிப்பிடப்பட்டது. ஆனால் இது தவறு என தீர்ப்பு வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.
Tags:    

Similar News