செய்திகள்

3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் வழங்க சபாநாயகர் மறுப்பு

Published On 2017-12-30 05:47 GMT   |   Update On 2017-12-30 05:47 GMT
கவர்னரால் பதவி பிரமாணம் செய்யப்பட்ட 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் வழங்க சபாநாயகர் வைத்திலிங்கம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி:

புதுவை அரசின் பரிந்துரையின்றி நியமன எம்.எல்.ஏ.க்களாக பாஜனதா நிர்வாகிகள் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோரை மத்திய உள்துறை அமைச்சகம் நேரடியாக நியமித்தது. அவர்களுக்கு கவர்னர் கிரண்பேடி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ஆனால் நியமிக்கும் அதிகாரம் கொண்டவரிடமிருந்து முறைப்படி உத்தரவு வராததால் 3 பேரையும் எம்.எல்.ஏ.க்களாக அங்கீகரிக்க முடியாது என சபாநாயகர் வைத்திலிங்கம் அதிரடியாக அறிவித்தார்.

இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கின் வாத, பிரதி வாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் தீர்ப்பு வெளியாகவுள்ளது.

இதற்கிடையே புதுவை அரசின் சார்பு செயலர் கண்ணன் சட்டப்பேரவை செயலருக்கு கடிதம் அனுப்பினார். அதில், நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டதில் முழுமையாக சட்டத்துக்கு உட்பட்டே நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருக்கிறது என்றும் இதனடிப்படையில் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம், தொகுதி மேம்பாட்டு நிதி உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் நியமன எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் அங்கீகரிக்காத நிலையிலும் 30 தொகுதிகளுக்கு மட்டும் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டுநிதி ஒதுக்கப்பட்ட நிலையில்,மேலும் 3 பேருக்கு நிதி ஒதுக்க கூறுவது சபாநாயகர் உத்தரவையும், சட்டப்பேரவையை அவமதிக்கும் செயல் என கூறி அரசு கொறடா அனந்தராமன் அமைச்சரவை துறையின் செயலர் மீது உரிமை மீறல் புகார் செய்தார்.

இக்கடிதத்தை உரிமை மீறல் குழுவிற்கு சபாநாயகர் அனுப்பினார். இதனையடுத்து நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பள வழங்க உத்தரவிட்ட அரசு சார்பு செயலர் கண்ணனுக்கு சட்டமன்ற உரிமை மீறல் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வருகிற 2-ந்தேதிஉரிமை மீறல் குழு முன் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் வழங்கும் அரசு சார்பு செயலரின் உத்தரவை சபாநாயகர் வைத்திலிங்கம் நிராகரித்தார். நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டமன்ற செயலகம் ஏற்று கொள்ளாத நிலையில் அவர்களுக்கு சம்பளம் வழங்குவது என்பது சட்டமன்ற விதிகளுக்கு புறம்பானது என கூறி அரசு சார்பு செயலரின் கடிதத்தை சபாநாயகர் திருப்பி அனுப்பினார்

நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் வழங்குவதில் தடை ஏதுமில்லை என கவர்னர் கிரண்பேடி 2 நாட்களுக்கு முன் கூறியுள்ள நிலையில் சபாநாயகரின் நடவடிக்கை புதுவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News