செய்திகள்

கல்லூரிக்குள் புகுந்து மாணவி மீது தாக்குதல்: ஜவுளிக்கடை மேலாளர் கைது

Published On 2017-12-22 10:14 GMT   |   Update On 2017-12-22 10:14 GMT
பாளை அருகே மகளிர் கல்லூரிக்குள் புகுந்து மாணவியை தாக்கியது தொடர்பாக ஜவுளிக்கடை மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:

பாளை அருகே நாகர்கோவில் நான்கு வழிச்சாலையில் ஒரு மகளிர் கல்லூரி உள்ளது. இங்கு ஏராளமான மாணவிகள் படித்து வருகிறார்கள். நெல்லை டவுணை சேர்ந்த ஜவுளிக்கடை மேலாளர் வெங்கடசுப்பிரமணியன் என்பவரது மகளும் இங்கு படிக்கிறார். நேற்று முன்தினம் இந்த கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக வணிகவியல் துறை மாணவிகளுக்கும், கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை மாணவிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு மாணவியை மற்றொரு தரப்பு மாணவிகள் தாக்கினார்களாம். தாக்குதலில் வெங்கடசுப்பிரமணியனின் மகளுக்கும் காயம் ஏற்பட்டது. இதுபற்றி அவர் தந்தையிடம் கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடசுப்பிரமணியன் தனது உறவினர்களுடன் கல்லூரிக்கு சென்றார். அங்கு மகளை தாக்கிய மாணவிகளை அவர் தாக்கியதாக தெரிகிறது. இதில் மாணவி அபிஷா உள்பட 2 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுபற்றி கல்லூரி நிர்வாகி அமரசேகரன் முன்னீர்பள்ளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கட சுப்பிரமணியனை கைது செய்தனர். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News