செய்திகள்

காட்பாடியில் பைக், லேப்-டாப் திருடிய 2 பேர் கைது

Published On 2017-12-17 12:21 GMT   |   Update On 2017-12-17 12:21 GMT
காட்பாடி பகுதியில் மோட்டார் சைக்கிள், மடிக்கணினி திருடிய ஆந்திர வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர்:

காட்பாடி போலீசார் சித்தூர் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக நடந்து சென்ற வாலிபரை சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முரண்பாடான தகவல்கள் தெரிவித்தார். அதனால் மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

அதில், அவர் காட்பாடி காங்கேயநல்லூரை சேர்ந்த கமலக்கண்ணன் (வயது 23) என்பதும், காட்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மோட்டார் சைக்கிள், மடிக்கணினி ஆகியவற்றை திருடி ஆந்திராவில் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து கமலக்கண்ணனை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த குற்ற சம்பவங்களில் அவரது கூட்டாளி ஆந்திர மாநிலம் பொம்மசமுத்திரத்தை சேர்ந்த சுரேசுக்கும் (26) தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். சுரேசிடம் இருந்து மொபட் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த மொபட் கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி காட்பாடி தாராபடவேடு பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தபோது திருட்டு போயிருந்தது.

மோட்டார் சைக்கிள், மடிக்கணினி திருட்டில் ஈடுபட்ட சுரேஷ் போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருக்க திருட்டு மொபட்டை பயன்படுத்தி ஆந்திராவில் இருந்து காட்பாடிக்கு வந்து சென்றுள்ளார். கமலக்கண்ணன், சுரேஷ் ஆகியோர் திருடிய மோட்டார் சைக்கிள், மொபட், மடிக்கணினி ஆகியவற்றையாரிடம் விற்பனை செய்தார்கள்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News