செய்திகள்

அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டம் வாபஸ்: டிசம்பர் 27, 28-ல் பேச்சுவார்த்தை

Published On 2017-12-15 11:58 GMT   |   Update On 2017-12-15 11:58 GMT
ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பிறகு பேச்சுவார்த்தை நடத்துவதாக அமைச்சர் உறுதி அளித்த நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளனர்.
சென்னை:

தமிழக அரசின் இதரத்துறை ஊழியர்களுக்கு இணையாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும், 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் 48 மணி நேரம் (2 நாட்கள்) காத்திருப்பு போராட்டத்தை நேற்று தொடங்கினர்.

தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த போராட்டத்தை நடத்தின. போக்குவரத்து கழக தலைமை அலுவலகமான பல்லவன் இல்லத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். 

இதையடுத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வந்துள்ளது. இது தொடர்பாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இதையடுத்து தொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டத்தை திரும்ப பெறுவதாக தொமுச தலைவர் சண்முகம் தெரிவித்தார். இதுதொடர்பாக தீர்மான நகலையும் அவர் வாசித்தார்.

அப்போது, தற்போது ஆர்.கே.நகர் தேர்தல் காரணமாக தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், தேர்தல் முடிந்தபின்னர் டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் அமைச்சர்  விஜயபாஸ்கருடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக சண்முகம் கூறினார்.

போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டதை தொழிலார்களில் ஒரு பிரிவினர் ஏற்கவில்லை. ஆவேசம் அடைந்த அவர்கள், அங்கிருந்த நாற்காலிகளை தூக்கி வீசி எதிர்ப்பை தெரிவித்தனர்.  அத்துடன், எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் வேறு சில பகுதிகளிலும்  தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
Tags:    

Similar News