செய்திகள்

ஆயுள் தண்டனை பெற்றவரை விடுதலை செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2017-12-14 02:15 GMT   |   Update On 2017-12-14 02:15 GMT
நடிகை ராணி பத்மினியை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற காவலாளியை சிறையில் இருந்து விடுதலை செய்யும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

நாலுபேருக்கு நன்றி, பக்கத்து வீட்டு ரோஜா உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ராணி பத்மினி. சென்னை அண்ணாநகரில் தனது தாயார் இந்திராகுமாரியுடன் வசித்து வந்தார்.

இவரது வீட்டில் கார் டிரைவராக ஜெபராஜ், காவலாளியாக லட்சுமிநரசிம்மன், சமையல்காரராக கணேசன் ஆகியோர் வேலை செய்தனர். இவர்கள் 3 பேரும் சேர்ந்து 1986-ம் ஆண்டு ராணி பத்மினி, அவரது தாயார் இந்திரா குமாரி ஆகியோரை கொடூரமாக கொலை செய்து, தங்க நகைகள், பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றதாக திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த கொலை வழக்கை விசாரித்த செங்கல்பட்டு செசன்சு கோர்ட்டு, 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து கடந்த 1989-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து 3 பேரும் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, டிரைவர் ஜெபராஜுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தும், மற்ற இருவர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கவில்லை என்று அவர்களை விடுதலை செய்தும் 1990-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில், போலீஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ‘காவலாளி லட்சுமிநரசிம்மன் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதை ஐகோர்ட்டு கவனிக்க தவறிவிட்டது. எனவே, லட்சுமிநரசிம்மனுக்கு செசன்சு கோர்ட்டு வழங்கிய தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைக்கின்றோம்’ என்று கடந்த 2001-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. இதையடுத்து லட்சுமி நரசிம்மன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

சுமார் 18 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்துள்ள லட்சுமி நரசிம்மனை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி அவரது மனைவி எஸ்.எல்.மேரி, சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

அதில், ‘அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆயுள் கைதிகள் பலரை 2008-ம் ஆண்டு தமிழக அரசு முன்கூட்டியே விடுதலை செய்தது. அதுபோல என் கணவரையும் விடுதலை செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.



இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜீவ் ஷக்தேர், என்.சதீஷ்குமார் ஆகியோர், இந்த வழக்கை ஏற்றுக்கொண்டனர். லட்சுமி நரசிம்மனை சிறையில் இருந்து விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். 
Tags:    

Similar News