செய்திகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தேர்தல் அதிகாரி வேலுச்சாமி மாற்றம் - புதிய அதிகாரியாக பிரவீன் நாயர் நியமனம்

Published On 2017-12-09 09:35 GMT   |   Update On 2017-12-09 09:48 GMT
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக நியமனம் செய்யப்பட்ட தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை மாற்றி, புதிய அதிகாரியாக பிரவீன் நாயரை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி, டி.டி.வி.தினகரன் உள்பட 59 பேர் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

இதற்கிடையே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு சென்ற நடிகர் விஷாலின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி வேலுச்சாமி நிராகரித்தது சர்சையானது.

இந்நிலையில், ஆர்.கே.நகரில் தேர்தல் அலுவலராக செயல்பட்டு வந்த வேலுச்சாமி மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய அதிகாரியாக பிரவீன் நாயர் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
ஆர்.கே.நகரில் தேர்தல் அதிகாரியை மாற்றவேண்டும் என தி.மு.க., பா.ஜ.க. உள்பட பல்வேறு முக்கிய கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன.



ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா  நடப்பதை தடுக்கும் விதமாக தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின், தமிழிசை உள்பட பல தலைவர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், தேர்தல் அதிகாரியை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறுகையில், ஆர்.கே.நகரில் தேர்தல் அதிகாரி மாற்றப்பட்டதை வரவேற்கிறோம் என தெரிவித்துள்ளார். இதேபோல் நடிகர் விஷாலும் வரவேற்றுள்ளார்.

பிரவீன் நாயர் கடந்த முறையும் ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News