செய்திகள்

குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் ரூ.170 கோடி சேதம்: கண்காணிப்பு குழு அதிகாரிகள் தகவல்

Published On 2017-12-08 10:05 GMT   |   Update On 2017-12-08 10:05 GMT
குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் ரூ.170 கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கண்காணிப்பு குழு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

நாகர்கோவில்:

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஒக்கி புயல் கண்காணிப்பு குழு அதிகாரிகளான ககன்தீப் சிங் பேடி, ராமச்சந்திரன், ராஜேந்திரகுமார், ஜோதி நிர்மலா, மின் வாரிய இயக்குனர் தண்டபாணி மற்றும் கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் புயல் நிவாரண பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. 4 அம்சங்களை மையமாக வைத்து நிவாரண பணிகள் நடந்தது. மின்சாரம், குடிநீர் சேத மதிப்பீடு கணக்கெடுப்பு, வேளாண் பயிர் பாதிப்பு ஆகியவற்றை சீர் செய்யும் பணிகளை முதன்மையாக கொண்டு செயல்பட்டோம்.

மின் இணைப்பு கொடுக்கும் பணிகள் நகராட்சி பகுதியில் பெருமளவு முடிந்து விட்டது. 15 பேரூராட்சிகளில் 100 சதவீதம் அளவுக்கும், 40 பேரூராட்சிகளில் 50 சதவீதம் அளவுக்கும் பணிகள் முடிந்துள்ளன.

1150 கிராமங்களில் 642 கிராமங்களில் முழுமையாக மின் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது. இன்னும் 2 நாட்களில்அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டு விடும். இதுபோல 689 கிராமங்களில் குடிநீர் முழுமையாக வழங்கப்பட்டு உள்ளது. 400 கிராமங்களில் தண்ணீர் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

மீனவ கிராமங்களில் எடுத்த கணக்கெடுப்பு படி 66 படகுகள் மட்டுமே இன்னும் கண்டுபிடிக்கப்பட வேண்டும். 713 மீனவர்களையும் மீட்டாக வேண்டும். மராட்டியம், கர்நாடகம், லட்சத்தீவு, கேரளா மற்றும் குஜராத்தில் கரை ஒதுங்கி தங்கியுள்ள 2,478 மீனவர்களை ஊருக்கு அழைத்து வர ஏற்பாடு செய்து வருகிறோம். அதுவரை அங்கு தங்கியிருக்கும் அவர்களுக்கு முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் லட்சத்தீவு போன்ற கடற்கரை பகுதியில் இருந்து ஊர் திரும்ப தேவையான டீசல் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில் காசர்கோடை அடுத்த மங்களூர் கடல் பகுதியில் இன்று 11 குமரி மீனவர்கள் கரை ஒதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களின் விவரங்களை சேகரித்து வருகிறோம்.

குமரி மாவட்டத்தில் 4495 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இதற்காக ரூ.93 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. இனி 537 வீடுகளுக்கு மட்டுமே நிவாரணம் வழங்க வேண்டும்.

குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் ஏற்பட்ட சேதங்கள் இன்று வரை கணக்கெடுத்ததில் ரூ.170 கோடிக்கு சேதம் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இன்று மாலை வரை கணக்கெடுப்பு நடைபெறும். அதன்பிறகு முழுமையாக சேத மதிப்பீடு தெரியவரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News