செய்திகள்

ஆசிரியர் கண்டித்ததால் 2 மாணவர்கள் வி‌ஷம் குடித்தனர்

Published On 2017-11-27 08:34 GMT   |   Update On 2017-11-27 08:34 GMT
முத்துப்பேட்டை அருகே ஆசிரியர் கண்டித்ததால் 2 மாணவர்கள் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த காரைக்கான் வெளி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் முத்துக்குமார் (வயது 16). எடையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியுடன் முத்துக்குமார் பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனை ஆசிரியர் ஒருவர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் பயந்து போன முத்துக்குமார் வீட்டுக்கு சென்று அரளி விதையை சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து மாணவர் அமைப்பின் மாவட்ட துணைத்தலைவர் மணிகண்டன் மற்றும் சிலர் பள்ளிக்கு சென்று விவரம் கேட்டுள்ளனர். இதில் முறையான பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து மணிகண்டன் மற்றும் அப்பள்ளி மாணவர் சந்தோஷ் ஆகியோர் தலைமையில் மாணவர்கள் பள்ளி அருகே திருத்துறைப்பூண்டி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எடையூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனால் திருத்துறைப் பூண்டி- முத்துப்பேட்டை சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது.

இந்நிலையில் மறியல் போராட்டத்தை நடத்திய மாணவர் சந்தோஷ்குமாரை ஆசிரியர் ஒருவர் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவரும் வீட்டிற்கு சென்று அரளி விதையை சாப்பிட்டு மயங்கி விழுந்தாராம். உடனே அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த எடையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எடையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News