செய்திகள்

கரும்புக்கான கொள்முதல் விலையை ரூ.4 ஆயிரமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ்

Published On 2017-11-23 02:23 GMT   |   Update On 2017-11-23 02:23 GMT
கரும்புக்கான கொள் முதல் விலையை டன்னுக்கு ரூ.4 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து சோதனைகளை எதிர்கொண்டு வந்த கரும்பு விவசாயிகள் வேறு வழியின்றி தாங்கள் விளைவித்த கரும்பை ஆந்திராவில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். இதனால் தமிழகத்தின் சர்க்கரை சந்தையில் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப் படும் நிலையில், அதைத் தவிர்க்க தமிழக ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தின் பெரும்பாலான சர்க்கரை ஆலைகளில் இரு வாரங்களுக்கு முன்பே அரவைத் தொடங்கிவிட்ட நிலையில், இன்றுவரை கரும்புக்கான கொள்முதல் விலையை ஆட்சியாளர்கள் அறிவிக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளில் கரும்பு கொள்முதல் செய்த வகையில் 24 தனியார் சர்க்கரை ஆலைகள் ரூ.1454.56 கோடி, 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் ரூ.198.44 கோடி, இரு பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் ரூ.48.35 கோடி என மொத்தம் ரூ.1701.35 கோடி பாக்கி வைத்துள்ளன.



இதுவரை நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை. 26-ந்தேதி பேச்சு நடத்தப்படவுள்ள நிலையில், அதனால் பயன் கிடைக்குமா? என்பதும் தெரியவில்லை. அதனால் தான் உழவர்கள் ஆந்திராவிற்கு கரும்பை அனுப்பும் முடிவை எடுத்துள்ளனர். எனவே சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக பெற்றுத் தருவதுடன், கரும்புக்கான கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.4000 ஆக உயர்த்த வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News