செய்திகள்

ஜெயலலிதா மரணம்: அரசு மருத்துவர்கள் நாளை ஆஜராக சம்மன் அனுப்பியது விசாரணை ஆணையம்

Published On 2017-11-22 08:03 GMT   |   Update On 2017-11-22 08:46 GMT
நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த அரசு மருத்துவர்களுக்கு இன்று சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை:

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஜெயலலிதா மரணம் குறித்து ஏதாவது தகவல் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் அதுகுறித்த விவரத்தை பிரமாண பத்திரமாகவோ அல்லது புகார் மனுவோ ஆணையத்தில் தாக்கல் செய்யலாம் என்று ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி தி.மு.க. மருத்துவர் அணி துணைத்தலைவரும், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளருமான டாக்டர் சரவணன், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆனூர் ஜெகதீசன், ஜெ.தீபாவின் கணவர் மாதவன் உள்பட 70 பேர் நேரடியாகவும், தபால் மூலமாகவும் பிரமாண பத்திரத்தை ஆணையத்துக்கு அளித்துள்ளனர்.

இதற்கிடையே, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அலுவலகத்தில் இன்று காலை விசாரணை தொடங்கியது. தி.மு.க. மருத்துவர் அணி துணை தலைவர் டாக்டர் சரவணன் உள்ளிட்ட சிலர் வருகை தந்து விளக்கம் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், விசாரணை ஆணையம் சார்பில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக அரசு மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக 2 அரசு மருத்துவர்களுக்கு இன்று சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இதையடுத்து அரசு மருத்துவர்கள் நாளை ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து நீதிபதி ஆறுமுகசாமி கூறுகையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக யார், எப்போது பிரமாண பத்திரம் அளித்தாலும் ஏற்றுக்கொள்வேன். மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பான விவகாரத்தில் யாராக இருந்தாலும் விசாரணை நடத்தப்படும்.

உண்மையை வெளிக்கொண்டு வர விசாரணை முழுமையாக நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News