செய்திகள்

போயஸ் கார்டனுக்குள் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் நுழைய முயற்சி: போலீஸ் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

Published On 2017-11-22 06:38 GMT   |   Update On 2017-11-22 06:39 GMT
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டை நோக்கி சென்ற டிடிவி தினகரன் ஆதரவாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை:

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். எனவே, அங்கு டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் யாரையும் அனுமதிக்கப்படவில்லை. சமீபத்தில் போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. அப்போது சசிகலாவின் அறைகள், ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றனின் அறையில் சோதனை நடத்தப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. எனவே, போயஸ் கார்டன் இல்லத்திற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் இன்று போயஸ் கார்டன் இல்லத்திற்கு வர உள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், காலை 11 மணியளவில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் போயஸ் கார்டனை நோக்கி சென்றனர். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. வெற்றிவேல், கலைராஜன் உள்ளிட்ட பலர் ஒன்றுதிரண்டு வந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.



ஆனால், அவர்களை போயஸ் கார்டனை நெருங்க விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களை அமைதியாக கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் ஜெயலலிதாவுக்கு செய்ய வேண்டிய மாதசடங்குகளை செய்ய வேண்டும் என்று கூறி உள்ளே செல்ல முற்பட்டனர். அவர்களுடன் சடங்குகளை செய்வதற்காக புரோகிதர்களும் வந்தனர்.

ஆனால், வருமான வரி சோதனை நடந்திருப்பதால் உள்ளே யாரையும் அனுமதிக்க முடியாது என்று போலீசார் தெரிவித்தனர். உள்ளே செல்ல அனுமதிக்காததால், போலீசாருடன் வெற்றிவேல் மற்றும் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் திரும்பிச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி வெற்றிவேல் கூறும்போது, ‘வருமான வரி சோதனையை காரணம் காட்டி ஜெயலலிதாவுக்கு திதி கொடுக்க விடாமல் செய்துவிட்டனர். திதி கொடுக்க வந்த புரோகிதர்களையும் வெளியேற்றினர்’ என்றார்.
Tags:    

Similar News