செய்திகள்

முதுமலை வனப்பகுதியில் காட்டு பன்றிக்கு வைத்த சுருக்கு கம்பியில் சிக்கி பெண் புலி பலி

Published On 2017-11-21 16:54 GMT   |   Update On 2017-11-21 16:54 GMT
முதுமலை வனப்பகுதியில் காட்டு பன்றியை பிடிப்பதற்காக வைக்கப்பட்டு இருந்த சுருக்கு கம்பியில் பெண் புலி சிக்கி இறந்துள்ளது.
கூடலூர்:

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வனபகுதியில் உள்ள இம்ரல்லா அணை அருகே புலி ஒன்று வால் மட்டும் அசைந்த நிலையில் மயங்கி கிடந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக முதுமலை கள இயக்குனர் சீனிவாச ரெட்டி, வனச்சரகர் ராஜேந்திரன் மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.

அப்போது கழுத்தில் காயத்துடன் சுருக்கு கம்பி மாட்டி பெண் புலி இறந்து கிடந்தது தெரிய வந்தது. பின்னர் முதுமலை கால்நடை டாக்டர் விஜயராகவன் தலைமையில் பிரேத பரிசோதனை நடந்தது. சோதனையில் கழுத்தில் சுருக்கு கம்பி மாட்டி இருப்பது தெரிய வந்தது. மேலும் ரசாயன பரிசோதனைக்காக புலியின் உடற்கூறுகள் எடுக்கப்பட்டது.

இது குறித்து கால்நடை டாக்டர் விஜயராகவன் கூறியதாவது:-

இந்த புலிக்கு 2½ வயது இருக்கும். வேறு ஏதோ பகுதியில் காட்டு பன்றியை பிடிப்பதற்காக வைக்கப்பட்டு இருந்த சுருக்கு கம்பியில் புலி சிக்கி உள்ளது. பின்னர் அங்கு இருந்து தப்பி இந்த பகுதிக்கு வந்தது. கழுத்தில் சுருக்கு கம்பி மாட்டியதால் புலி 5 நாட்களுக்கு மேல் உணவு உண்ணாததால் இறந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து முதுமலை கள இயக்குனர் கூறியதாவது:-

யாரோ மர்மநபர்கள் காட்டு பன்றியை பிடிப்பதற்காக வைக்கப்பட்டு இருந்த சுருக்கு கம்பியில் பெண் புலி சிக்கி இறந்துள்ளது. சுருக்கு கம்பி வைத்த மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் வனச்சரகர் ராஜேந்திரன் தலைமையில் மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் சுருக்கு கம்பி வைத்த மர்மநபர்களை கைது செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News