செய்திகள்

ஜோதிடரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது

Published On 2017-11-21 14:55 GMT   |   Update On 2017-11-21 14:55 GMT
சொன்ன வாக்கு பலிக்காததால் ஜோதிடரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் விஜயக்குமார். இவர் வாஸ்து மற்றும் ஜோதிடம் பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் விஜய குமாரையும் அவரது நண்பர் நரசிம்மன் என்பவரும் நேற்று மர்ம நபர்கள் சிலர் கடத்தி கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் மொரனஅள்ளி உள்ள ஒரு குடிசைவீட்டில் கட்டி போட்டு மிரட்டியதாகவும், அவர்களிடம் இருந்து 2 பேரும் தப்பித்து வந்து காவேரிப்பட்டணம் போலீசில் புகார் கொடுத்தனர்.

புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் உடனே போலீசார் மொரனஅள்ளி சென்று ஜோதிடரை கடத்தி சென்ற அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன், அவரது நண்பர்கள் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்த அய்யப்பன், சேலம் ஏற்காடு பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஜோதிடர் விஜயகுமாரிடம் முருகேசன் ஜோதிடம் பார்த்தார். அப்போது விஜயக்குமாருக்கு அவர் ரூ.50 ஆயிரம் பணத்தை கொடுத்ததாக தெரிகிறது.

இதையடுத்து விஜயகுமார் சொன்ன எந்த ஒரு பலனும் முருகேசனுக்கு பலிக்காததால் விரக்தியில் காணப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் விஜயக்குமாருக்கு கொடுத்த பணத்தை எப்படியாவது வாங்கிட வேண்டும் என்று நினைத்த அவர் தனது நண்பர்கள் அய்யப்பன், தர்மராஜ், காரி மங்கலம் கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த யுவராஜ், சேலம் ஏற்காட்டை சேர்ந்த கார்த்திக் மற்றும் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த ராஜா ஆகியோருடன் சேர்ந்து விஜயகுமாரை எப்படியாவது தனது வீட்டிற்கு அழைத்து வந்து பணத்தை வாங்கிவிட வேண்டும் என்று திட்டம் தீட்டினார்.

அப்போது அவர் போனில் விஜயகுமாரிடம் காரிமங்கலத்தில் உள்ள தனது நண்பர் யுவராஜ் என்பவர் வீட்டிற்கு வாஸ்து பார்க்க வருமாறு கூறி உள்ளார்.

அதனை நம்பிய விஜயகுமார் நேற்று காரில் தனது நண்பர் நரசிம்மனுடன் காவேரிபட்டணத்துக்கு வந்தார். அப்போது அங்கு காத்திருந்த முருகேசன் அவர்களை அழைத்துக் கொண்டு மொரன அள்ளியில் உள்ள தனது வீட்டிற்கு அருகே உள்ள ஒரு குடிசை வீட்டில் விஜயகுமாரையும், அவரது நண்பர் நரசிம்மனையும் கட்டிப்போட்டு கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்தால் உன்னை விட்டுவிடுகிறேன் என்று கூறி உள்ளார். பணத்தை கொண்டு வந்து கொடுத்து விடுவதாக கூறி அங்கிருந்து அவர்கள் தப்பித்து வந்துள்ளது தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கார்த்திக், யுவராஜ், ராஜா ஆகிய 3 பேரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News