செய்திகள்

சசிகலா சொத்து சேர்க்க ஜெயலலிதாதான் காரணம்: பழ. கருப்பையா குற்றச்சாட்டு

Published On 2017-11-20 04:24 GMT   |   Update On 2017-11-20 04:24 GMT
சசிகலா சொத்து சேர்க்க காரணமானவர் ஜெயலலிதா தான் என அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை:

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா ஒரு தனியார் டி.வி.க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

போயஸ் கார்டனில் ஏன் சோதனை நடத்தக்கூடாது. கோவிலுக்கு உரியவராக தெய்வமாக பூஜிக்கப்பட வேண்டியவர் 2 முறை ஜெயில் தண்டனை பெற்ற நிலையில் அவரை தூய மனிதர் என்று கூறுபவர்கள் கோமாளிகள்.

ரூ.2.5 லட்சம் கோடி மதிப்பிலான சொத்து சசிகலா குடும்பத்தினரின் கையில் உள்ளது. எனவே இந்த விசாரணை வளையத்தினுள் அ.தி.மு.க. அரசு, முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆகிய அனைவரையும் கொண்டு வர வேண்டும்.

முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குகூட தகுதியற்றவர்கள்.


பல லட்சம் கோடி பணம், சொத்து சசிகலாவின் கையில் இருக்க வேண்டும். அவர் சொத்து சேர்க்க காரணமானவர் ஜெயலலிதா தான். சசிகலாவிடம் உள்ள ரூ.2.5 லட்சம் கோடி பணத்தில் ரூ.1 லட்சம் கோடியை வைத்து தமிழக அரசின் கடனை அடைக்கலாம். மீதமுள்ள பணத்தில் ஓராண்டுக்கு வரியே போடாமல் இந்த அரசை நடத்தலாம்.

இவர்கள் மூலமாக தமிழகத்தில் போட்டி ஆட்சியை மோடி நடத்துகிறார். முதல்-அமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கொடுத்த கடிதத்தின் மீது கவர்னர் பன்வாரிலால் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை விட்டு விட்டு கவர்னர் ஆய்வு நடத்துவதை ஏற்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News