செய்திகள்

அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது: தம்பிதுரை பேட்டி

Published On 2017-11-19 15:02 GMT   |   Update On 2017-11-19 15:02 GMT
எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் ஆலமரம் போல் வளர்க்கப்பட்ட அதிமுக கட்சிக்கு அழிவே கிடையாது என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.
கரூர்:

கரூர் நகராட்சி 21- வது வார்டு பகுதியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. முகாமுக்கு கலெக்டர் கோவிந்த ராஜ் தலைமை தாங்கினார். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கினர்.

பின்னர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

கரூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூ.350 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. 2018ம் ஆண்டு ஜூன் மாதம் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு, 2019ல் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

பெரியாரின் திராவிட உணர்வும், தமிழ் இன பற்றும் இருக்கும் அ.தி.மு.க. என்றும் நிலைத்திருக்கும். அதனை யாராலும் அழிக்க முடியாது. போயஸ் கார்டனில் நடந்த வருமான வரித்துறை சோதனை மிகுந்த வேதனை அளிக்கிறது. போயஸ் கார்டன் ஜெயலலிதா சிங்கமாக வலம் வந்த இடம். அ.தி.மு.க.வின் ஒவ்வொரு தொண்டனும் கோவிலாக வழிபட்ட இடத்தில் சோதனை நடந்தது வருத்தமளிக்கிறது.

அ.தி.மு.க. நடிகரால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி. நீண்ட காலம் நிலைத் திருக்காது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 35 வருடமாக சொல்லிக் கொண்டு இருக்கிறார். ஆனால் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் ஆலமரம் போல் வளர்க்கப்பட்ட கட்சி வாரிசு கட்சி இல்லை. அதற்கு மக்கள்தான் வாரிசு. எனவே இந்த கட்சிக்கு அழிவே கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் கூறும்போது, மற்ற மாவட்டங்களை காட்டிலும் கரூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை. இதற்கு சுகாதாரத்துறையும், பொதுமக்களின் ஒத்துழைப்பே காரணம்.

முதியோர் உதவித் தொகை கேட்டு பலர் மனு கொடுத்துள்ளனர். தகுதியுடைய அனைவருக்கும் உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக அதிகாரிகளிடம் பேசி, கரூர் மாவட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்குமாறு தெரிவித்துள்ளேன். மேலும் 21-வது வார்டு மக்களுக்கு ஒரு மாதத்திற்குள் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Tags:    

Similar News