செய்திகள்

‘பென் டிரைவ் இருந்தாலே ரகசியம் உள்ளதாக கூற முடியுமா?’- டி.டி.வி தினகரன் கேள்வி

Published On 2017-11-19 05:35 GMT   |   Update On 2017-11-19 05:35 GMT
'லேப் டாப் என்றால் பென் டிரைவ் இருக்கத்தானே செய்யும். பென் டிரைவ் இருந்தாலே ரகசியம் உள்ளதாகக் கூற முடியுமா?' என டி.டி.வி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தஞ்சாவூர்:

போயஸ் கார்டனில் சோதனை நடத்திய வருமானவரித்துறையினர் லேப்டாப் மற்றும் பென் டிரைவ் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியான நிலையில், இது தொடர்பாக தஞ்சையில் செய்தியாளர்களிடம் இன்று டி.டி.வி தினகரன் கூறுகையில், ''லேப் டாப் என்றால் பென் டிரைவ் இருக்கத்தானே செய்யும். பென் டிரைவ் இருந்தாலே ரகசியம் உள்ளதாகக் கூற முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், அவர் கூறுகையில்:-

பதவியில் இருப்பதால் முதல்வர் பழனிசாமி ஆட்சி, அதிகாரம் இருக்கிறது என்ற தைரியத்தில் பேசி வருகிறார். பதவியில் இல்லாவிட்டால் சசிகலா தலைமையின் கீழ் இருந்திருப்பார்கள். இன்னும் வெளிப்படையாக கிராமத்தில் உள்ளவர்கள் சொல்வதைப் போல சொல்ல வேண்டுமென்றால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிதற்றி வருகிறார்.

நான் ஜெயலலிதாவின் மெய்க்காப்பாளனாக, ஒரு மகன் போல இருந்தேன். பெரா வழக்கு போன்றவற்றில் சிக்கவைக்கப்பட்ட போது ஜெயலலிதாதான் நான் ஒதுங்கி இருக்க வேண்டும் என்று அக்கறை காட்டினார். சில பேரின் சதியின் காரணமாக நாங்கள் ஒதுக்கப்பட்டோம்.

சசிகலாவைப் பாதுகாக்க ஜெயலலிதா தவறிவிட்டார் என்று திவாகரன் கூறியிருப்பதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். சகோதரி கஷ்டத்தில் இருப்பதால் திவாகரன் ஆதங்கத்தில் பேசியதை அரசியலாக்க வேண்டாம்.

அதிமுகவை அழிப்பதற்காக நடைபெறும் உச்சகட்ட நடவடிக்கைதான் வருமான வரி சோதனை. போயஸ்கார்டனில் வருமான வரி சோதனை நடைபெற்றபோது யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை

இவ்வாறு டி.டி.வி தினகரன் கூறினார்.
Tags:    

Similar News