செய்திகள்

அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த கவர்னருக்கு அதிகாரம் உள்ளது: அமைச்சர் உதயகுமார்

Published On 2017-11-15 04:38 GMT   |   Update On 2017-11-15 04:38 GMT
அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த கவர்னருக்கு அதிகாரம் உள்ளது என அமைச்சர் உதயகுமார் கூறினார்.
மதுரை:

மதுரையில் பிரம்மகுமாரிகள் அமைப்பு சார்பில் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இருந்து திருப்பாலை வரை 5 கிலோ மீட்டர் தூர மராத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றது.

இந்த போட்டியை அமைச்சர் உதயகுமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்கள் பெய்யும். இந்த மழை காலங்களில் இடை மற்றும் கடைசி காலங்களில் அதிகளவு மழை இருக்கும். ஆனால் இப்போது தொடக்கத்திலேயே அதிக மழை பெய்துள்ளது.

வடகிழக்கு பருவமழையால் தமிழ்நாட்டிற்கு 88 சதவீத மழை கிடைத்துள்ளது. கடலோர மாவட்டங்களில் 92 சதவீத மழை பெய்துள்ளது. இந்த கனமழைக்கு கடலோர மாவட்டங்கள் பாதிக்காத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

மழை பாதிப்புகளை சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழை இன்னும் எஞ்சியுள்ள 50 நாட்களில் தொடர் மழையாகவோ, கன மழையாகவோ எப்படி பெய்தாலும் அதனை எதிர்கொள்ள முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தயாராக உள்ளது.


மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தண்ணீர் வடிந்த உடன் பயிர் சேதம் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படும். வெள்ள நிவாரண பணிகள் போர்க்கால நடவடிக்கையாக நடந்து வரும் சூழ்நிலையில் நிவாரண பணிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை என்று எதிர்கட்சிகள் பேசிவருவது அரசியலுக்காகத்தான்.

தமிழக அரசு செய்து வரும் வெள்ள நிவாரண பணிகளை அவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். கோவையில் அரசு அதிகாரிகளுடன் தமிழக கவர்னர் ஆலோசனை நடத்தியிருப்பது அவருக்குரிய அதிகாரம்.

அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்த கவர்னருக்கு அதிகாரம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News