செய்திகள்

தோரிப்பள்ளியில் 3000 ஆண்டுகள் பழமையான கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு

Published On 2017-11-14 15:25 GMT   |   Update On 2017-11-14 15:25 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தோரிப்பள்ளி என்ற இடத்தில், 3000 ஆண்டுகள் பழமையான பெருங் கற்காலத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் இருப்பதை, அறம் வரலாற்று ஆய்வுக்குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அறம் வரலாற்று ஆய்வு மைய தலைவர் அறம்கிருஷ்ணன் தலைமையில் பிரியன், மஞ்சுநாத், கணபதி ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்ட போது, தோரிபள்ளியில் 20-க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அறம்கிருஷ்ணன் கூறுகையில், "தோரிப்பள்ளியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் 20-க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் ஒரே இடத்தில் உள்ளன.

அவை எந்த காலகட்டத்தை சேர்ந்தவை என்பது குறித்து ஓய்வு பெற்ற தொல்லியல் ஆய்வாளர்கள் பூங்குன்றன், சுப்பிரமணி ஆகியோரிடம் கேட்டபோது 3000 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போகிறவர்களை குழியில் புதைத்திருக்க வேண்டும், அதற்கு பின் தாழியில் வைத்து மண்ணுக்குள் புதைக்கபட்டிருக்க வேண்டும், காலப்போக்கில் இறந்தவர்களின் ஈமக்குழியை சுற்றி கல்வட்டம், பிறகு கற்பதுக்கை, கற்திட்டை என்று மாறி, பிற்காலத்தில் நடுகல்லாக மாற்றம் பெற்றிருக்கக்கூடும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இங்குள்ள கல்வட்டங்கள் சற்று வித்தியாசமாக ஒரு மீட்டர் முதல் 2 மீட்டர் உயரம் உடைய பெரிய அளவு கற்களை வட்டமாக வைத்திருப்பது போல் தெரிகிறது. இந்த இடத்தை அகழாய்வு செய்தால் மேலும் பல புதிய தகவல்கள் கிடைக்கும். இந்த கல்வட்டங்கள், தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இருப்பதால் எந்த நேரத்திலும் அழிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் அல்லது தொல்லியல் துறை முன்வந்து இவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்".

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News