செய்திகள்

தேயிலை விலை வீழ்ச்சியின் போது ஏலத்துக்கு வந்த கிரீன் டீ எஸ்டேட்டை வாங்கிய சசிகலா

Published On 2017-11-14 10:26 GMT   |   Update On 2017-11-14 10:26 GMT
தேயிலை விலை வீழ்ச்சியின் போது ஏலத்துக்கு வந்த கிரீன் டீ எஸ்டேட்டை சசிகலா தரப்பினர் திட்டமிட்டு வாங்கியது தெரிய வந்துள்ளது.
கோத்தகிரி:

நீலகிரி மாவட்டத்தில் பெரும்பான்மையான தொழிலாக விளங்கி வருவது தேயிலை தொழில். இதில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் 22 ஆயிரம் விவசாயிகள் நீலகிரியில் செயல்படும் மாநில அரசின் 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் உறுப்பினர்களாக உள்ளனர்.

தேயிலை தூள் உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளாக விளங்கும் பசுந்தேயிலைக்கு கடந்த 2011-12-ல் கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டது. விவசாயிகள் வழங்கும் பசுந்தேயிலைக்கு கிலோவுக்கு ரூ. 6 முதல் 8 வரை தான் விலை கிடைத்தது.

இதனால் விவசாயிகள் விரக்தியில் இருந்தனர். தங்களின் பொருளாதாரம் சீர் குலைந்ததால் மத்திய, மாநில அரசின் மீது அவர்களின் கோபம் திரும்பியது. விவசாயிகளை சமாளிக்க அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகள் வழங்கும் பசுந்தேயிலைக்கு கிலோவுக்கு ரூ. 2 மானியம் வழங்கி உத்தரவிட்டார்.

தேயிலை தொழிலில் நிலவிய பல்வேறு பிரச்சனைகளால் மேலும் பல தேயிலை தோட்டங்களும் விற்பனைக்கு வந்தன. குறிப்பாக மிகவும் பிரபலமான தாய்சோலை, எடக்காடு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் தோட்டங்கள் சசிகலா ஆதரவாளர்களால் பேரம் பேசப்பட்டது.

தேயிலை விலை வீழ்ச்சி விவகாரம் உச்சத்தில் இருந்த 2012-ல் தான் கர்சன் தேயிலை தோட்டத்தை சசிகலா மற்றும் அவரது தரப்பினர் பல கோடி ரூபாய் விலைக்கு வாங்கினர்.

கொடநாடு கர்சன் தேயிலை தோட்டங்களை சுற்றி பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பலருக்கும் சொந்தமான தேயிலை தோட்டம் உள்ளது.

இங்கு நிலவும் சீதோஷ்ண நிலை, தேயிலை விளைச்சலுக்கு உகந்தது. பசுமைப் போர்வை விரித்தது போல் காட்சியளிக்கும் தேயிலை தோட்டங்களை வாங்க அரசியல் கட்சியினர் உள்பட பெரும் செல்வந்தர்கள், தொழிலதிபர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த 2011-ம் ஆண்டு இறுதியில் கர்சன் தேயிலை தோட்டம் வங்கி மூலம் ஏலத்துக்கு வந்தது. அப்போது சில வி.வி.ஐ.பி.க்கள் இந்த எஸ்டேட்டை வாங்க திட்டமிட்ட தகவல் சசிகலா தரப்புக்கு தெரிய வந்தது.

அப்போது தங்கள் அரசியல் கவுரவத்தை வெளிக்காட்ட சசிகலா ஆதரவாளர்கள் இந்த எஸ்டேட்டை கைப்பற்ற களம் இறங்கியது. ஏற்கனவே தங்கள் வசம் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் இருந்து 4 கி.மீ. தொலைவில் கர்சன் எஸ்டேட் உள்ளதால் இந்த எஸ்டேட்டையும் சசிகலா தரப்பினர் திட்டமிட்டு வாங்கியது தெரிய வந்துள்ளது.
Tags:    

Similar News