செய்திகள்

சென்னை வந்தார் பிரதமர் மோடி: கவர்னர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் வரவேற்பு

Published On 2017-11-06 04:23 GMT   |   Update On 2017-11-06 04:23 GMT
தினத்தந்தி பவள விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக டெல்லியில் இருந்து இன்று சென்னை வந்த பிரதமர் மோடியை கவர்னர், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் வரவேற்றனர்.
சென்னை:

இந்தியாவின் ‘நம்பர் 1’ தமிழ் நாளிதழ் என்ற சிறப்பை பெற்ற ‘தினத்தந்தி’ பவள விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். காலை 9.55 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை அவர் வந்தடைந்தார்.



அங்கு பிரதமர் நரேந்திர மோடியை கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை ராஜாங்க மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் எம்.பி., எச்.ராஜா, தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். விமான நிலைய வாசலில் ஏராளமான பா.ஜ.க. தொண்டர்கள் திரண்டு நின்று மோடியை வரவேற்றனர்.

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, 10.20 மணிக்கு மெரினா கடற்கரை அருகேயுள்ள ஐ.என்.எஸ். அடையார் ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கினார். அங்கு அவரை அமைச்சர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் வரவேற்கிறார்கள். பின்னர் அங்கிருந்து காரில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்துக்கு  செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, ‘தினத்தந்தி’ பவள விழாவில் பங்கேற்கிறார்.

பின்னர்,  ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.வி. சோமநாதன் மகள் திருமண விழாவில் மோடி பங்கேற்கிறார். தி.மு.க. தலைவர் கருணாநிதியையும் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளார்.
Tags:    

Similar News