செய்திகள்

மல்லனூர் கிராமத்திற்கு குடிநீர் வழங்கக்கோரி யூனியன் அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை

Published On 2017-10-22 17:38 GMT   |   Update On 2017-10-22 17:38 GMT
திருவாடானை யூனியன் மல்லனூர் கிராமத்திற்கு குடிநீர் வழங்கக்கோரி அப்பகுதி பெண்கள் யூனியன் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
தொண்டி:

திருவாடானை யூனியன் தேளூர் ஊராட்சி மல்லனூர் கிராமத்தில் 75-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்திற்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுஉள்ளது. ஆனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் முற்றிலுமாக தடைபட்டுஉள்ளது. இதனால் இந்த கிராமத்தில் பொதுமக்கள் குடிநீருக்காக பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று அந்த கிராமத்தில் உள்ள சமுதாய கிணற்றில் மோட்டார் பொருத்தி குடிநீர் வசதி செய்து கொடுத்துள்ளனர்.

ஆனால் கடும் வறட்சி காரணமாக கடந்த சில மாதங்களாக அந்த கிணற்றிலும் தண்ணீர் வற்றிவிட்டது. இதனால் மீண்டும் இந்த கிராமத்தில் கடும் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. தற்போது அங்குள்ள சமுதாய கிணற்றில் பல மணி நேரம் காத்திருந்து தண்ணீர் எடுக்க வேண்டியுள்ளது.

இந்த நிலையில் மகளிர் குழு சார்பில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று குடிநீர் பிரச்சினை குறித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் நேற்று காலை இந்த கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் யூனியன் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். அதன்பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியனை நேரில் சந்தித்து மல்லனூர் கிராமத்திற்கு குடிநீர் வசதி செய்து தரக்கோரி வலியுறுத்தினர். பின்னர் குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் இன்னும் ஓரிரு தினங்களில் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வது குறித்து ஆலோசனை நடத்தி மல்லனூர் கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News