செய்திகள்

பழனி அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி

Published On 2017-10-11 11:43 GMT   |   Update On 2017-10-11 11:43 GMT
பழனி அருகே நாயை சிறுத்தை கடித்து கொன்றதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

பழனி, அக். 11-

பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் வனச்சரகத்தில் அதிக அளவு யானை, சிறுத்தை, வரிப்புலி, கேளையாடு, மான், கரடி உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இவை அடிக்கடி உணவு மற்றும் தண்ணீருக்காக வனத்தை விட்டு வெளியேறி விளை நிலங்கள் மற்றும் மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பழனி - கொடைக்கானல் சாலையில் வட்டப்பாறை அருகே சிறுத்தை நடமாட்டம் இருந்ததை அப்பகுதி மக்கள் உறுதி செய்தனர். இது குறித்து வனத்துறையினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்கள் கண்காணிப்பு செய்து வந்தனர்.

தற்போது வரதமாநதி அணைப்பகுதியில் சுற்றித் திரிந்த நாயை சிறுத்தை கவ்வி சென்று கொன்று விட்டு தலை மற்றும் குடல் பாகங்களை போட்டு சென்றது. அதிகாலையில் அப்பகுதிக்கு சென்ற பொதுமக்கள் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

சிறிது நேரம் கழித்து அதே பகுதியில் சிறுத்தை நடந்து சென்றதையும் மக்கள் பார்த்தனர். இது குறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். சுற்றித் திரியும் சிறுத்தையை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுத்தை நடமாட்டத்தால் பாலாறு பொருந்தலாறு, அண்ணா நகர், புளியமரத்து செட் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த பீதியில் உறைந்துள்ளனர்.

Tags:    

Similar News