செய்திகள்

எண்ணூர் துறைமுகத்தில் விபத்தில் சிக்கிய ஈரான் நாட்டு கப்பலை விடுவிக்க ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2017-10-11 03:20 GMT   |   Update On 2017-10-11 03:20 GMT
எண்ணூர் துறைமுகத்தில் 2 கப்பல்கள் மோதிக்கொண்ட விபத்தில் சிக்கிய ஈரான் நாட்டு கப்பலை விடுவிக்கலாம் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சென்னையைச் சேர்ந்த மீனவர் சங்க பிரதிநிதி ராஜா, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

ஈரான் நாட்டை சேர்ந்த ‘எம்.டி.மாப்பிள்’ என்ற கப்பலும், காஞ்சீபுரத்தை சேர்ந்த ‘எம்.டி.டான்’ என்ற சரக்கு கப்பலும் கடந்த ஜனவரி மாதம் எண்ணூர் துறைமுகத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் கப்பல்களில் இருந்து வெளியேறிய எண்ணெய் கழிவு கடற்கரை பகுதிகளில் படலமாக மிதந்ததால் கடலின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக மீனவர்களுக்கு ஏற்பட்ட இழப்பை சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனங்களிடம் இருந்து வசூலித்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை ஈரான் நாட்டு கப்பலை விடுவிக்கக்கூடாது. அந்த கப்பலை விடுவிக்க கப்பல் போக்குவரத்து இயக்குனரகம் வழங்கியுள்ள தடையில்லா சான்றை ரத்துசெய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கப்பல் போக்குவரத்து இயக்குனரகம் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘ஈரான் கப்பல் உரிமையாளர் ஏற்கனவே ரூ.203 கோடிக்கு வங்கி உத்தரவாதம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் தான் கப்பலை எடுத்துச்செல்ல தடையில்லா சான்று வழங்கப்பட்டது’ என்றார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்க ஈரான் கப்பல் நிறுவனம் ரூ.203 கோடிக்கு வங்கி உத்தரவாதம் அளித்துள்ளதால் அந்த கப்பலை விடுவிக்கலாம். இதுதொடர்பாக போலீசார் பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணையை ஒரு மாதத்துக்குள் முடித்து சம்பந்தப்பட்ட கோர்ட்டில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இழப்பீடு தொடர்பாக மனுதாரர் பசுமை தீர்ப்பாயத்தை நாடி பரிகாரம் தேடிக்கொள்ளலாம். இந்த மனு முடித்துவைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News