செய்திகள்

புதுவை பல்கலைக்கழக துணைவேந்தரை ஊழியர்கள் சிறைபிடிப்பு

Published On 2017-09-28 10:25 GMT   |   Update On 2017-09-28 10:25 GMT
புதுவையில் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தரை ஊழியர்கள் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரி:

புதுவை காலாப்பட்டில் இயங்கி வரும் மத்திய பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த பேராசிரியர் திலகன், இளநிலை உதவியாளர் ஜெயமூர்த்தி, டிரைவர் ஆனந்தன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து துணைவேந்தர் (பொறுப்பு) அனிஷா பஷீர்கான் நடவடிக்கை எடுத்தார்.

இந்த நிலையில் புதுவை பல்கலைக்கழக, அனைத்து பேராசிரியர்கள், ஊழியர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் நேற்று மாலை பொறுப்பு துணைவேந்தர் அனிஷா பஷீர்கானை சந்தித்து பேராசிரியர் உள்ளிட்ட ஊழியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளது குறித்து பேசுவதற்காக சென்றனர். அப்போது துணைவேந்தரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை.

இதனால் ஆவேசம் அடைந்த பேராசிரியர்கள், ஊழியர்கள் கூட்டமைப்பை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் பிரபாகர், கன்வீனர் சுராஜ்குமார் ஜின்கா, செயலர் டாக்டர் காசி ராஜன், தேவநாதன் மற்றும் மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் துணைவேந்தர் அலுவலக வாயில் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் தலைமையில் போலீசார் 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் விடிய, விடிய முற்றுகை போராட்டம் தொடர்ந்தது. இதனால் பல்கலைக்கழக வளாகமே பரபரப்புக்குள்ளானது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் துணை வேந்தர் பதவி விலக கோரி கோ‌ஷம் எழுப்பிக் கொண்டே இருந்தனர்.

பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் போராட்டம் காரணமாக வீட்டுக்கு செல்ல முடியாமல் துணைவேந்தர் அனிஷா பஷீர்கான் தனது அலுவலகத்திலேயே முடங்கி போனார்.
Tags:    

Similar News