செய்திகள்

காஷ்மீரில் சாலை அமைக்கும் பணியின் போது கிருஷ்ணகிரியை சேர்ந்த கிரீப் வீரர் பலி?

Published On 2017-09-21 15:15 GMT   |   Update On 2017-09-21 15:15 GMT
காஷ்மீரில் சாலை அமைக்கும் பணியின் போது கிருஷ்ணகிரியை சேர்ந்த கிரீப் வீரர் பலியாகியிருப்பாரோ என்ற அச்சத்தில் அந்த வீரரின் சொந்த கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அடுத்த அகசிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). இவர் கடந்த 20 ஆண்டுகளாக மத்திய அரசின் சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் கேரிசன் ரிசர்ஷ் என்ஜினீயரிங் போர்ஸ் என்ற சாலை அமைக்கும் கட்டுமான நிறுவனத்தில் கிரீப் வீரராக உள்ளார். இவருக்கு மஞ்சுளா(35) என்ற மனைவியும், பவித்ரா(9) என்ற மகளும் உள்ளனர்.

இவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஒரு மாத விடுமுறையில் தனது சொந்த ஊரான அகசிப்பள்ளிக்கு வந்துள்ளார். பின்னர் விடுமுறை முடிந்த நிலையில் மீண்டும் பணிக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கு வடக்கு காஷ்மீரில் லடாக் பகுதியான நிம்முவில் இருந்து பதம், தெர்ஷா வழியாக இமாச்சல பிரதேசத்திற்கு 259 கிலோமீட்டர் தூர சாலை அமைக்கும் பணியில் சிவக்குமார் தனது சக ஊழியர்களுடன் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த 18-ந் தேதி மாலை காஷ்மீரில் இருந்து சிவக்குமாரின் அண்ணன் திம்மராஜ் என்பவரை, சிவக்குமாருடன் பணியாற்றும் சத்தியமூர்த்தி என்பவர் தொடர்பு கொண்டு, சாலை அமைக்கும் பணியின் போது சிவக்குமார் உள்பட 6 பேர் நிலச்சரிவில் சிக்கி கொண்டதாகவும், அவர்களில் இருவரது உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும், சிவக்குமாரின் கதி என்ன என்று தெரியவில்லை எனவும் தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மஞ்சுளாவின் குடும்பத்தினர், சிவக்குமார் பணியாற்றிய இடத்தில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்தபோது அவர்கள் சரிவர பதில் அளிக்கவில்லை என தெரிகிறது.

இதையடுத்து மஞ்சுளா மற்றும் அவரது குடும்பத்தினர் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கதிரவனிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் பணியின்போது நிலச்சரிவில் சிக்கியதாக கூறப்படும் சிவக்குமாரின் தற்போதைய நிலை குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் உரிய பதில் அளிக்கவில்லை. எனவே தனது கணவரின் நிலை பற்றி விசாரித்து உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கிய சிவக்குமார் பற்றிய எந்த தகவலும் தெரியாததால் அவரது குடும்பத்தினரும், சொந்த கிராமத்தினரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
Tags:    

Similar News