செய்திகள்

கீழடி அகழாய்வுக்கு பொறுப்பாளராக அமர்நாத் ராமகிருஷ்ணனை நியமிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2017-09-21 03:11 GMT   |   Update On 2017-09-21 03:11 GMT
பணியிட மாற்றம் செய்யப்பட்ட அமர்நாத் ராமகிருஷ்ணனை மீண்டும் கீழடி அகழாய்வுக்கு பொறுப்பாளராக நியமிக்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மதுரை அருகே கீழடியில் தொல்லியல் துறை மேற்கொண்டு வந்த 3-ம் கட்ட அகழாய்வு இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டதாகவும், கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட கட்டுமானங்களின் தொடர்ச்சியோ, அதனுடன் தொடர்புடைய கூறுகளோ கிடைக்கவில்லை என்றும் அதன் பொறுப்பாளர் ஸ்ரீராமன் கூறியுள்ளார். முந்தைய ஆய்வுகளில் நிறுவப்பட்ட தமிழர் நாகரிக பெருமையை சிதைக்கும் சதியாகவே இது தோன்றுகிறது.

கீழடியில் முதல் 2 கட்ட அகழாய்வுகளை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் தான் நடத்தினர். நாம் நினைப்பதை விட தமிழ் நாகரிகம் தொன்மையானது என்பதையும் கீழடியில் கிடைத்த பொருட்கள் உறுதி செய்த நிலையில், அது மூன்றாம் கட்ட ஆய்வில் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மூன்றாம் கட்ட ஆய்வு அதற்கு நேர் எதிராக அமைந்துள்ளது. இதற்கு காரணம் மத்திய அரசும், அதன் விருப்பப்படி கீழடி அகழ்வாய்வுக்கான பொறுப்பாளர் ஸ்ரீராமனும் செய்த சதி தான்.

கீழடியில் நடைபெற்று வரும் மூன்றாவது கட்ட அகழாய்வை நிறைவு செய்ய அனுமதிக்கக்கூடாது. அகழாய்வில் கிடைத்த எந்த பொருளையும் கரிமப் பகுப்பாய்வுக்கு அனுப்பக்கூடாது. பணியிட மாற்றம் செய்யப்பட்ட அமர்நாத் ராமகிருஷ்ணனை மீண்டும் கீழடி அகழாய்வுக்கு பொறுப்பாளராக நியமிக்க வேண்டும். கீழடியில் 110 ஏக்கர் பரப்பளவு நிலம் உள்ள நிலையில் அகழ்வாய்வுப் பணிகளை விரிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News