செய்திகள்

குண்டர் சட்ட நடவடிக்கை ரத்தானதால் திருமுருகன் காந்தி விடுதலை: காவல்துறைக்கு நன்றி தெரிவித்தார்

Published On 2017-09-20 14:57 GMT   |   Update On 2017-09-20 14:57 GMT
குண்டர் சட்ட நடவடிக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேரும் இன்று சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
சென்னை:

இலங்கை முள்ளிவாய்க்கால் போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த மே மாதம் 21-ந்தேதி சென்னை மெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினார். அனுமதியின்றி நிகழ்ச்சியை நடத்தியதாக திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி திருமுருகன் உள்பட 4 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 4 பேர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவு நகல் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிறை நடைமுறைகள் முடிவடைந்ததும் இன்று திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

புழல் சிறையில் இருந்து வெளியே வந்த அவர்களை மே 17 இயக்கத்தினர் வரவேற்று அழைத்துச் சென்றனர். அப்போது நிருபர்களிடம் பேசிய திருமுருகன் காந்தி, தனது விடுதலைக்காக குரல் கொடுத்த அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை முழு உத்வேகத்துடன் முன்னெடுப்பதாகவும், மாணவர்களின் எதிர்பார்ப்பை வெல்லும் வகையில் போராட்டத்தை ஒருங்கிணைப்பதாகவும் தெரிவித்தார்.

எங்களுக்கெல்லாம் ஓய்வு கொடுத்து படிக்க வேண்டிய புத்தகங்களை படிப்பதற்கான நேரத்தை ஒதுக்கி கொடுத்து, குண்டர் சட்டத்தின் மூலமாக உணவையும் இடத்தையும் கொடுத்து படிப்பதற்கு அவகாசத்தையும் கொடுத்த தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் திருமுருகன் காந்தி கூறினார்.
Tags:    

Similar News