செய்திகள்

18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம்: சபாநாயகர் எடுத்த முடிவு சரியானது- பி.எச்.பாண்டியன்

Published On 2017-09-19 05:26 GMT   |   Update On 2017-09-19 05:26 GMT
தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ள 18 எம்.எல்.ஏ.க்களின் நோக்கம் கட்சிக்கு எதிராக உள்ளது. எனவே சபாநாயகர் எடுத்த முடிவு சரியானது என்று பி.எச்.பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை:

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபா நாயகர் தனபால் நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

கட்சிதாவல் சட்டத்தின் கீழ் அவர்களை தகுதி இழப்பு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சபாநாயகரின் இந்த முடிவு சரியானது என்று முன்னாள் சபாநாயகரும், மூத்த வக்கீலுமான பி.எச்.பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

எம்.எல்.ஏ.க்களை தகுதி இழப்பு செய்வதற்கு சபா நாயகருக்கு அதிகாரம் உள்ளது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஒரு எம்.எல்.ஏ. ஈடுபடுகிறார் என்பதால் சபாநாயகர் திருப்தி அடைந்தால் போதும்.

தற்போது தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ள 18 எம்.எல்.ஏ.க்களின் நோக்கம் கட்சிக்கு எதிராக உள்ளது. தி.மு.க. தொடர்ந்த வழக்கில் இவர்களும் சேர்ந்து உள்ளனர். எனவே அவர்களின் நோக்கம் என்ன என்பது தெரிகிறது.

ஆட்சிக்கு எதிராக இவர்கள் செயல்படுவதாக தான் அர்த்தம். வெளிப்படையாக இருந்தாலும், உள்ளுக்குள் இருந்தாலும் கட்சி விரோத நடவடிக்கையாகத் தான் கருதப்படும். அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

ஜானகி முதல்- அமைச்சராக இருந்த போது சட்டசபையில் மெஜாரிட்டி ஓட்டெடுப்பு கோரப்பட்டது. அப்போது நான் சபாநாயகராக இருந்தேன். அ.தி.மு.க.வில் இருந்து 33 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் பக்கம் சேர்ந்தனர். காங்கிரசில் 61 எம்.எல். ஏ.க்கள் இருந்தனர்.

காங்கிரஸ் கட்சி தலைவரை முதல்-அமைச்சராக்க திட்டமிட்டனர். 33 எம்.எல். ஏ.க்களை தகுதி இழப்பு செய்ய சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நீக்கப்பட்டனர்.

ஓட்டெடுப்பில் ஜானகி அரசு வெற்றிபெற்றது. எம்.எல்.ஏ.க்களை நீக்குவதற்கு முன் கோர்ட்டுக்கு சென்றனர். நீக்கிய பிறகு நீதிமன்றம் செல்லவில்லை அதோடு சட்டசபையும் கலைக்கப்பட்டது.

இவ்வாறு பி.எச்.பாண்டியன் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News