செய்திகள்
பாரம்பரிய நீராவி என்ஜின் ரெயில் கோடம்பாக்கம் ரெயில் நிலையத்தை வந்தடைந்த போது எடுத்த படம்

சென்னையில் இயக்கப்பட்ட நீராவி என்ஜின் ரெயில்: மக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்

Published On 2017-09-11 03:37 GMT   |   Update On 2017-09-11 03:37 GMT
சென்னையில் எழும்பூரில் இருந்து கோடம்பாக்கம் வரை நீராவி என்ஜின் ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயிலை மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
சென்னை:

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று பழமையை நினைவுகூரும் வகையில், ரெயில்வே நிர்வாகம் சார்பில் பாரம்பரிய ரெயில்கள் இயக்கப்படும். தெற்கு ரெயில்வேயின் முதன்மை கோட்டமான சென்னையில் வருடந்தோறும் இத்தகைய சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

கடந்த மாதம் சுதந்திர தினத்தன்று தவிர்க்கமுடியாத காரணங்களால் பாரம்பரிய ரெயில் இயக்கப்படவில்லை. இதனால் இ.ஐ.ஆர்-21 ரெயில் என்ஜினுடன் (நீராவியில் இயங்கக்கூடியது) கூடிய ரெயிலை செப்டம்பர் 10-ந்தேதி இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. உலகிலேயே தற்போது இயங்கிக்கொண்டு இருக்கும் பழமையான ரெயில் என்ஜின்களில் இதுவும் ஒன்று. 1909-ம் ஆண்டு வரை இயக்கப்பட்ட இந்த ரெயில் என்ஜின் பின்னர் காட்சி பொருளாக வைக்கப்பட்டது.

இந்த ரெயில் என்ஜின் ஏற்கனவே 2013-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று சென்னை எழும்பூரில் இருந்து கிண்டி வரை இயக்கப்பட்டது. இதுவரை சென்னையில் 5 முறை இயக்கப்பட்டு உள்ள இந்த ரெயில் என்ஜினின் வயது 158 ஆண்டுகள் ஆகும்.

திட்டமிட்டபடி எழும்பூர் ரெயில் நிலையத்தில் 4-வது நடைமேடையில் இருந்து நேற்று காலை 9.30 மணிக்கு நீராவி என்ஜினுடன் கூடிய இந்த ரெயில் இயக்கப்பட்டது. இதில் ஒரே ஒரு ரெயில் பெட்டி மட்டுமே இணைக்கப்பட்டு இருந்தது.

இந்த ரெயிலில் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மட்டுமே இருந்தனர். எழும்பூரில் ரெயில் புறப்பட தயாரான போது, பயணிகள் சிலர் அதில் ஏற முயற்சித்தனர். ஆனால் அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் பயணிகள் ஏமாற்றத்துடன் தங்களது செல்போனில் ரெயிலை படம் எடுத்து மட்டுமே திருப்தி அடைந்தனர். இந்த ரெயில் கோடம்பாக்கம் வரை சென்றது. இந்த ரெயிலை மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

இதுகுறித்து பயணிகள் சிலர் கூறியதாவது:-

பாரம்பரிய ரெயிலை பார்ப்பதே இப்போது அரிதாகி விட்டது. இந்த ரெயிலை பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது. வழக்கமாக இதுபோன்ற ரெயில்கள் இயக்கப்படும்போது, அதில் ஏறி உள்ளே சுற்றி பார்க்க அனுமதி வழங்கப்படும். ஆனால் இந்த ரெயிலில் பயணிகள் ஏற அனுமதி மறுக்கப்பட்டது ஏமாற்றத்தை அளித்தது.

பாரம்பரிய ரெயில்கள் இயக்கப்படுவதே பொதுமக்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக தான். எனவே இனி இயக்கப்படும் பாரம்பரிய ரெயில்களிலாவது பயணிகள் உள்ளே சென்று பார்க்க அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News