செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் கடை தீப்பிடித்து எரிந்தது

Published On 2017-09-09 08:06 GMT   |   Update On 2017-09-09 08:06 GMT
கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் கடை தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி அருகே எலாவூர் ரெயில் நிலையம் அடுத்த வீராசாமி நகரில் குடியிருப்புகள் மத்தியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

இன்று அதிகாலை டாஸ்மாக் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இது குறித்து தகவலறிந்ததும் கடை ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

கடையை திறந்து பார்த்த போது மதுபாட்டில்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனே தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் பல லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் சேதமடைந்தன.

குடியிருப்புகள் அருகே உள்ள இந்த டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கடந்த 2 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இக்கடை கடந்த ஆகஸ்டு மாதம் 18-ந் தேதிக்குள் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடை அகற்றப்படவில்லை. இதனால் மர்ம நபர்கள் கடைக்குள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார்களா? என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

கடைக்குள் மின் வயர்கள் எதுவும் சேதமடையவில்லை. இதனால் யாராவது தீ வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News