செய்திகள்

திருவாடானையில் வட்டார வளர்ச்சி அலுவலக பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2017-08-30 13:31 GMT   |   Update On 2017-08-30 13:31 GMT
திருவாடானையில் குடிபோதையில் அலுவலர்களை தாக்கிய சம்பவத்தை கண்டித்து வட்டார வளர்ச்சி அலுவலக பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொண்டி:

திருவாடானை தாலுகா என்.மங்கலம் கிராமத்தில் நேற்று முன்தினம் 100 நாள் வேலை திட்டத்தில் ஏராளமான பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த காசி மகன் தங்கராஜ் (வயது 52) என்பவர் குடிபோதையில் நின்று கொண்டு வேலை செய்த பெண்களிடம் ஆபாச வார்த்தைகளால் பேசினாராம். மேலும் அங்கு வேலை செய்த ஒரு பெண்ணிடம் தகராறு செய்து அவரை தாக்கினாராம்.

இதுகுறித்து திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு வந்த மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வன்மீகநாதன், ஊராட்சி செயலாளர் ராஜசேகர் ஆகியோர் தகராறு செய்து கொண்டிருந்த தங்கராஜை தட்டிக்கேட்டுள்ளனர்.

இதில் ஆத்திரமடைந்த தங்கராஜ் ஊராட்சி செயலாளரை கடுமையாக தாக்கி மிரட்டல் விடுத்தாராம். அதை தடுத்த துணை வட்டார வளர்ச்சி அலுவலரையும் தகாத வார்த்தைகளால் பேசி அவரின் சட்டையை பிடித்து தாக்க முயன்றாராம்.

இதையடுத்து வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் எஸ்.பி.பட்டினம் போலீசிற்கு தகவல் கூறினர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர்.

மேலும் இதுகுறித்து ஊராட்சி செயலாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தங்கராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த நிலையில் நேற்று திருவாடானை ஒன்றிய அலுவலகம் முன்பு அலுவலர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News