செய்திகள்

போச்சம்பள்ளி அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த விவசாயி மரணம்

Published On 2017-08-22 14:28 GMT   |   Update On 2017-08-22 14:28 GMT
போச்சம்பள்ளி அருகே மாடு மேய்த்து கொண்டிருந்த போது கிணற்றுக்குள் தவறி விழுந்து விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
போச்சம்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மேட்டு புலியூர் பகுதியை சேர்ந்தவர் செட்டியப்பன் (வயது 77). விவசாயி.

இவர் நேற்று காலை 10 மணி அளவில் புலியூரில் இருந்து ஊத்தங்கரை செல்லும் சாலையில் உள்ள முருகேசன் என்பவரது விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே மாடு மேய்த்து கொண்டிருந்தார்.

கடந்த ஒரு வார காலமாக அந்த பகுதியில் அவ்வபோது மழை பெய்து வருகிறது. இதனால் விவசாய தோட்டத்தில் மழை நீர் நிரம்பி தோட்டம் முழுவதும் சேறும், சகதியுமாக மாறி இருக்கிறது. இதில் மாடு மேய்த்து கொண்டிருந்த செட்டியப்பன் திடீரென தனது கால் சகதியில் சிக்கி வழுக்கி நேராக கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.

இதற்கிடையே தனது தந்தையை தேடி அவருடைய மகன் மாதேஷ் என்பவர் அங்கு வந்தார். அப்போது மாடு மட்டும் அங்கு மேய்ந்து கொண்டிருந்தது. தந்தையை காணவில்லை. அவர் வைத்திருந்த துண்டு துணி கிணற்றின் கரையில் கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் தனது தந்தை கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பாரூர் போலீஸ் நிலையத்துக்கும், போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தார். தகவல் அறிந்ததும் உடனே போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் அங்கு வந்தனர்.

பின்னர் தீயணைப்பு வீரர்கள் 61 அடி ஆழம் நிறைந்த கிணற்றுக்குள் இறங்கி செட்டியப்பனை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் கிணற்றில் தண்ணீர் நிரம்பி கொண்டே இருந்தது. இதனால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

பின்னர் இன்று காலை 6 மணி அளவில் மீண்டும் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து பம்ப் செட் மூலம் தண்ணீர் முழுவதும் வெளியே இறைத்து சேற்றில் சிக்கி இருந்த செட்டியப்பன் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Tags:    

Similar News