செய்திகள்

அலங்காநல்லூர் அருகே டாஸ்மாக் கடையில் கத்தி முனையில் ரூ. 3¼ லட்சம் கொள்ளை

Published On 2017-08-07 10:11 GMT   |   Update On 2017-08-07 10:11 GMT
அலங்காநல்லூர் அருகே டாஸ்மாக் கடை ஊழியர் களை கத்தி முனையில் மிரட்டி ரூ. 3 லட்சத்து 20 ஆயிரத்தை முகமூடி கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர்.
அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம் பட்டியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு நேற்று காலை முதல் இரவு வரை பரபரப்பான விற்பனை நடைபெற்றது. இரவு 9.30 மணியளவில் மேற்பார்வையாளர் தங்கம், விற்பனையாளர்கள் சஞ்சய் குமார், பழனிச்சாமி ஆகியோர் விற்பனை தொகையை எண்ணிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் சிலர் வந்தனர். அவர்கள் தங்கள் முகத்தில் கருப்பு முகமூடி அணிந்திருந்தனர். கடை ஊழியர்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய அவர்கள் பணத்தை தரும்படி கேட்டனர்.

ஆனால் ஊழியர்கள் பணத்தை கொடுக்க மறுத்தனர். இதனைத் தொடர்ந்து முகமூடி கொள்ளையர்கள் பணம் கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி விட்டு பணப்பெட்டியில் இருந்த ரூ. 3 லட்சத்து 20 ஆயிரத்தை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.

இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கடை மேற்பார்வையாளர் தங்கம் அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முகமூடி கொள்ளையர்கள் குறித்து அனைத்து காவல் நிலையங்களுக்கும், ரோந்து காவல்பிரிவுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இருப்பினும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

கொள்ளை நடந்த டாஸ்மாக் கடைக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார்? அவர் களுக்கு உதவியாக யாரேனும் செயல்பட்டார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News