செய்திகள்

முதுகுளத்தூர், கடலாடி தாலுகாக்களில் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்காததால் விவசாயிகள் அதிருப்தி

Published On 2017-08-06 17:23 GMT   |   Update On 2017-08-06 17:23 GMT
முதுகுளத்தூர், கடலாடி தாலுகாக்களில் பொய்த்த நெல் விவசாயத்திற்கு பயிர் இன்சூரன்ஸ் தொகை வழங்காததால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

முதுகுளத்தூர்:

முதுகுளத்தூர், கடலாடி தாலுகாக்களில் பொய்த்த நெல் விவசாயத்திற்கு பயிர் இன்சூரன்ஸ் தொகை வழங்காததால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

2016-17 ஆம் ஆண்டில் முதுகுளத்தூர், கடலாடி, கமுதி தாலுகாக்களில் பாதிக்கபட்ட நெல் விவசாயத்திற்கு பிரதமரின் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தின்கீழ், ஏக்கருக்கு 24 ஆயிரம் ரூபாய் இழப்பீடு பெற, 2016 நவம்பரில் இன்சூரன்ஸ் கம்பெனி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாய சான்றிதழ்களுடன் விவசாயிகள் பதிவு செய்தனர்.

இன்சூரன்ஸ் கம்பெனியில் பதிவு செய்த விவசாயிகளுக்கு நேரடியாக வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.

ஆனால் முதுகுளத்தூர் அருகே ஏனாதி, விளங்குளத்தூர், ஒருவானேந்தல், கீழச் செல்வனூர், ஏ.புனவாசல் ஆகிய வருவாய் குருப்புகளுக்குட்பட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகளுக்கு இதுவரையில் பயிர் இன்சூரன்ஸ் நிவாரண தொகை ஒதுக்கீடு செய்ய வில்லை.

இதுகுறித்து கலெக்டர், சம்மந்தபட்ட தாலுகா அலுவலகங்களில் விவசாயிகள் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இருந்தபோதிலும் புகார் தெரிவித்து 10 நாள்களுக்கு மேலாகியும், நிதி ஒதுக்கீடு இல்லாததால், சில கிராம விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண தொகை வழங்கப்படாமல் நிராகரிக்கப்பட்டதுபோல், பயிர் இன்சூரன்ஸ் தொகையும் கிடைக்காது என, விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கீழச்சாக்குளம் விவசாயி வழிவிட்டான் கூறுகையில், ‛‛கடந்த 3 ஆண்டுகளாகவே முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் நெல், பருத்தி, மிளகாய் விவசாயம் பருவமழை பொய்ப்பால் முற்றிலும் பாதிக்கபட்டது. இதனால் விவசாயத்தில் ஏற்பட்ட இழப்பீட்டை ஈடுகட்ட முடியாமல் பல விவசாயிகள் கடனாளியாக உள்ளனர். இந்தாண்டும் அதேபோல் நெல் விவசாயத்திற்காக வாங்கப்பட்ட கடனை, இன்சூரன்ஸ் பணம் வந்தவுடன் செலுத்தி, கடனிலிருந்து மீளலாம் என்றிருந்த விவசாயிகளுக்கு, நிதி ஒதுக்கீடு செய்யாததால், கடன் பெற்றவர்களிடம் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையால், குடும்பத்துடன் கொத்தடிமைகளாக கூலிக்கு செல்லும் அவலம் உள்ளது’’, என்றார்.

Tags:    

Similar News