செய்திகள்

திருவள்ளூர் அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.3 கோடி நிலம் மோசடி: 4 பேர் கைது

Published On 2017-07-27 02:11 GMT   |   Update On 2017-07-27 02:11 GMT
திருவள்ளூர் அருகே ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்ததாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகிறார்கள்.
திருவள்ளூர்:

சென்னை தியாகராய நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ்(வயது 38), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். திருவள்ளூரை அடுத்த புங்கத்தூரில் இவருக்கு சொந்தமான நிலம் 2 ஏக்கர் 78 சென்ட் உள்ளது. அந்த இடத்தின் தற்போதைய மதிப்பு ரூ.3 கோடி. அந்த நிலத்தை கடந்த ஆண்டு வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்ய வெங்கடேஷ் முடிவு செய்தார்.

அரக்கோணத்தை சேர்ந்த கந்தசாமி(77) என்பவர் தன் உடன் பிறந்த சகோதரர்களின் வாரிசுகளான குப்பம்மாள் சத்திரத்தை சேர்ந்த ஏழுமலை(47), வெங்கல்லை சேர்ந்த சரஸ்வதி(39), கடம்பத்தூரை சேர்ந்த லட்சுமி(54), மற்றொரு சரஸ்வதி, வரதராஜன், கார்த்திகா, மாலா என 7 பேருடன் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்து அந்த நிலத்தை அபகரித்துள்ளார். பின்னர் அந்த நிலத்தை வேறு ஒருவருக்கு பொது அதிகாரம் கொடுத்துள்ளார்.

இதுபற்றி தெரிந்ததும் வெங்கடேஷ் அவர்கள் மீது நட வடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எம்.ஆர்.சிபி சக்கரவர்த்தி உத்தரவின்பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை சூப்பிரண்டு ஞானவேல், இன்ஸ்பெக்டர் நந்தகோபால், சப்-இன்ஸ்பெக்டர்கள் லியோ பிரான்சிஸ், சூர்யகுமார், பிலோமோன், கோபால், ரீட்டா ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.



இந்த வழக்கில் தொடர்புடைய கந்தசாமி, ஏழுமலை, சரஸ்வதி, லட்சுமி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து திருவள்ளூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வரதராஜன், மற்றொரு சரஸ்வதி, கார்த்திகா, மாலா ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள். 
Tags:    

Similar News