செய்திகள்

காட்பாடி ரெயில் நிலையத்தில் வைபை வசதி: பயணிகள் மகிழ்ச்சி

Published On 2017-07-25 11:45 GMT   |   Update On 2017-07-25 11:45 GMT
காட்பாடி ரெயில் நிலையத்தில் பிளாட் பாரங்களில் பயணிகள் பயன்பாட்டுக்காக 'வைபை' சேவை சோதனை அடிப்படையில் கொண்டு வரப்பட்டுள்ளது.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் காட்பாடியும் ஒன்று. சி.எம்.சி. ஆஸ்பத்திரி, வி.ஐ.டி. பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீபுரம் தங்கக் கோவில் என வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பயணிகள் ரெயில் சேவையைத்தான் பயன்படுத்துகின்றனர்.

அதன்படி, காட்பாடி ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்காக, தெற்கு ரெயில்வே பல்வேறு வசதிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், இன்றைய நவீன உலகில் பெரும்பாலானோர் ஆண்ட்ராய்டு செல்போனைத் தான் பயன்படுத்துகின்றனர்.

இவர்கள் ரெயிலுக்காக காத்திருக்கும் போது, அவர்களின் செல்போனில் நெட்பேக் முடிந்து போகலாம். அந்த சமயத்தில் பயணிகள், ரெயிலை தவறவிட வாய்ப்பு உள்ளது. எனவே, அவர்களின் சிரமத்தை குறைக்க ரெயில்வே நிர்வாகம் சார்பில் இலவச 'வைபை' சேவை வழங்கும் பணி காட்பாடி ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகள் முடிந்து சோதனை அடிப்படையில், வைபை சேவை பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறிய தாவது:-

சோதனை அடிப்படையில் வைபை சேவை கடந்த சில நாட்களாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் செல்போனில் வைபை ஆன் செய்ய வேண்டும். அதில் உள்ள செட்டிங்கில் சென்றால் இணையதளம் பக்கம் ஓபன் ஆகும். அதன் உள்ளே சென்று, தன் செல்நம்பரை பதிவு செய்ய வேண்டும்.

பின்னர் மொபைல் போனுக்கு வரும் 4 இலக்க எண்ணை அதில் பதிவு செய்தால் இலவச வைபை சேவை கிடைக்கும். ரெயில் நிலைய வளாகத்தில் இருக்கும் வரை வைபை ஆக்டிவேட் ஆகும் என்றார்.
Tags:    

Similar News