செய்திகள்

தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு வெயில் நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

Published On 2017-07-25 03:42 GMT   |   Update On 2017-07-25 03:42 GMT
தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு வெயில் நீடிக்கும். 29-ந் தேதிக்கு பிறகு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னை:

தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பு மழை பெய்ததால் குளிர்ச்சியான தட்பவெப்பநிலை நிலவியது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் சில இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெயில் பதிவாகி உள்ளது. இரவிலும் அதன் தாக்கத்தை உணர முடிகிறது.

இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தென்மேற்கு பருவமழை தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் வலு குறைந்து உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயில் அதிகமாக இருக்கிறது. அடுத்த 4 நாட்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்களை விட உள்மாவட்டங்களில் வெயில் அதிகமாக இருக்கும். கடலோர மாவட்டங்களில் 3 டிகிரி வரையிலும், உள் மாவட்டங்களில் 4 டிகிரி வரையிலும் வெயில் அதிகமாக இருக்கும்.

வெயில் அதிகரிப்பதற்கு கருமேகங்கள் உருவாகாததே காரணம். கடல் காற்று மிகவும் தாமதமாக நிலத்தை நோக்கி வீசுகிறது. காற்றின் ஈரப்பதம் மிகவும் குறைவாக உள்ளது. தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் வெயிலின் தன்மை அதிகமாகவும் இருந்திருக்கிறது, குறைவாகவும் இருந்திருக்கிறது. நேற்று காலை வரை தமிழகத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடும்படியாக மழை இல்லை.

ஜூன் 1-ந் தேதி முதல் தற்போது வரை 10 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும். இது சராசரி மழை அளவு. ஆனால் இந்த ஆண்டு 7 செ.மீ. மழை தான் பெய்துள்ளது. இது 28 சதவீதம் குறைவாகும்.

2013-ம் ஆண்டு இதே நாளில் 85 சதவீதம் குறைவாகவும், 2014-ல் 11 சதவீதம் குறைவாகவும், 2015-ல் 7 சதவீதம் குறைவாகவும், 2016-ல் 3 சதவீதம் குறைவாகவும் மழை பெய்துள்ளது.

இன்னும் 4 நாட்கள் வெயில் அதிகமாக இருக்கும். 29-ந் தேதிக்கு பிறகு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News