செய்திகள்

கயத்தாறு அருகே மர்ம காய்ச்சலுக்கு பிளஸ்-2 மாணவி பலி

Published On 2017-07-24 12:00 GMT   |   Update On 2017-07-24 12:01 GMT
கயத்தாறு அருகே மர்ம காய்ச்சலுக்கு பிளஸ்-2 மாணவி பலியானது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கயத்தாறு:

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தென்னம்பட்டியை சேர்ந்தவர் கலியுகவரதன். இவரது மகள் சுபாஷினி (வயது16). இவர் கடம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் கடந்த 20 நாட்களாக மர்மகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒட்டநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை சுபாஷினிக்கு நிலைமை மோசமானது. இதையடுத்து அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

தென்னம்பட்டி கிராமத்தில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அப்பகுதியை சேர்ந்த பட்டதாரி வாலிபர் ராமசுப்பு மற்றும் பிரபு ஆகியோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதே போன்று தென்னம்பட்டியை சேர்ந்த ஏராளமானோர் ஒட்டநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்களிடையே டெங்கு பீதி ஏற்பட்டுள்ளது. இகு குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

சமீபகாலமாக தென்னம்பட்டி கிராமத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஆனால் டாக்டர்கள் மர்ம காய்ச்சல் என கூறி சிகிச்சை அளிக்கின்றனர். குறிப்பாக சிறுவர்-சிறுமியர் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வருகின்றனர். தற்போது ஒரு மாணவியும் பலியாகி விட்டார். எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதார துறையினர் இக்கிராமத்திற்கு விரைந்து வந்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News