செய்திகள்

இலவச வேட்டி, சேலை திட்ட டெண்டரை இறுதி செய்ய இடைக்கால தடை: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2017-07-07 03:22 GMT   |   Update On 2017-07-07 03:22 GMT
இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கான டெண்டரை இறுதி செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

விருதுநகர் மாவட்டம் சோழபுரத்தில் உள்ள ஸ்ரீவெங்கட்ராம் நூற்பாலை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பொங்கல் பண்டிகைக்கு வழக்கமாக தமிழக அரசு சார்பில் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும். இதற்கான டெண்டரில் கலந்து கொள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து சாயப்பட்டறை கழிவுகள் எதுவும் வெளியேறவில்லை (‘ஜீரோ டிஸ்சார்ஜ்’) என்ற சான்றிதழ் பெற்ற நூற்பாலைகள் மட்டுமே பங்கேற்க முடியும் என்று அரசு நிபந்தனை விதித்துள்ளது.

எங்களது நிறுவனம் துணிகளை சாயமேற்றுவதற்காக மும்பையில் உள்ள நூற்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. மகாராஷ்டிரா போன்ற பிற மாநிலங்களில் சாயக்கழிவு நீர் கடலில் கலக்க அனுமதி உள்ளது.

இதனால் அங்கு சாயப்பட்டறை கழிவுகள் எதுவும் வெளியேறவில்லை என்று சான்றிதழ் பெற முடியாது. இந்த சான்றிதழ் இல்லாததால் எங்களை போன்ற நிறுவனங்கள் இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கான டெண்டரில் பங்கேற்க முடியவில்லை. எனவே, இலவச வேட்டி, சேலைக்கான டெண்டரை இறுதி செய்ய தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எம்.துரைசாமி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கான டெண்டரை இறுதி செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக அரசு பதில் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், வழக்கின் விசாரணையை வருகிற 13-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags:    

Similar News