செய்திகள்

அணிகள் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை: நத்தம் விசுவநாதன்

Published On 2017-07-04 07:40 GMT   |   Update On 2017-07-04 07:40 GMT
அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தெரிவித்தார்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அண்ணா ஆகியோரது படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழக வனத்துறை அமைச்சர் சீனிவாசனுக்கு அரசியல் முதிர்ச்சி கிடையாது. அதனால் அவர் தினந்தோறும் வெவ்வேறு விதமான கருத்துகளை தெரிவித்து வருகிறார். அதனால்தான் அவரது பேச்சை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பொருட்படுத்துவது இல்லை.

தற்போது நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. மத்திய, மாநில அரசுகளை குற்றம் சாட்டுவதை விடுத்து ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முறையிட்டால் உரிய தீர்வு கிடைக்கும்.


தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் அ.தி.மு.க. அணிகள் இணைய போவதாகவும், இதன் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் செயல்பட போவதாகவும் ஒருங்கிணைப்பு குழுவில் 7 பேர் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அவர் ஆரம்பத்தில் இருந்தே இதுபோல்தான் தெரிவித்து வருகிறார். அவர் சொல்வதைப்போல எங்கள் அணி சார்பில் எந்த குழுவும் அமைக்கப்படவில்லை. பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பார்த்திபன் எம்.பி., நத்தம் தொகுதி முன்னாள் செயலாளர் கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேணுகோபாலு, பழனிச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், திருமாறன், பெனாஸ்ரூம் யூசுப்அன்சாரி, பரசுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News