செய்திகள்

என்ஜினீயரிங் படிப்பில் சேர ஆர்வம் குறைவு: மாணவர்களை நேரடியாக தேர்வு செய்யக்கோரி வழக்கு

Published On 2017-06-22 09:27 GMT   |   Update On 2017-06-22 09:27 GMT
கலந்தாய்வு முறையில் இல்லாமல், மாணவர்களை தனியார் கல்லூரிகளே நேரடியாக தேர்வு செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில், முகமது ஜலீல் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

அண்ணா பல்கலைக் கழகத்தின் திருநெல்வேலி சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் நிர்வாகம் சங்கத்தின் தலைவராக உள்ளேன்.

தமிழ்நாடு தொழில் கல்வி மாணவர்கள் சேர்க்கை சட்டத்தின்படி, தனியார் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரியில் உள்ள மொத்த இடங்களில் 65 சதவீதமும், சிறுபான்மையினர் சுயநிதி கல்லூரிகளில் 50 சதவீத இடமும், அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஒற்றை சாளர முறையிலான கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது. மீதமுள்ள 35 சதவீதம் மற்றும் 50 சதவீத இடங்களை கல்லூரி நிர்வாகம் நிரப்பிக் கொள்ளலாம்.



கடந்த சில ஆண்டுகளாக என்ஜினீயரிங் படிப்பில் சேரும் ஆர்வம் மாணவர்களிடையே குறைந்து வருகிறது. 2014ம் ஆண்டு கலந்தாய்வு மூலம் நிரப்ப வேண்டிய 2 லட்சம் இடங்களில், ஒரு லட்சம் இடங்கள் நிரப்பப்படவில்லை. 2015-ம் ஆண்டு 2 லட்சத்து 10 ஆயிரம் இடங்களில், ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 83 இடங்கள் நிரப்பப்படவில்லை. 2016ம் ஆண்டு ஒரு லட்சத்து 84 ஆயிரம் இடங்களில், ஒரு லட்சத்து 18 இடங்கள் நிரப்பப்படவில்லை.

இந்த இடங்களை எல்லாம் கலந்தாய்வு முடிந்தவுடன், கல்லூரி நிர்வாகத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் வழங்கி விடுகிறது. குறித்த காலத்தில் வழங்காததால், இந்த இடங்கள் எல்லாம் அந்த கல்வியாண்டில், கல்லூரி நிர்வாகத்தாலும் நிரப்ப முடியாத நிலை ஏற்படுகிறது.

மாணவர்கள் சேராததால், தனியார் சுயநிதி கல்லூரிகளின் வருவாய் குறைகிறது. இதனால். ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை செய்துக் கொடுக்கும் செலவினால், தனியார் கல்லூரிகள் நஷ்டத்தில் இயங்குகிறது. இந்த நிலையில், நடப்பு கல்வியாண்டில் 22 என்ஜினீயரிங் கல்லூரிகள் நஷ்டத்தை எதிர்கொள்ள முடியாமல், இழுத்து மூடப்பட்டுள்ளது.

எனவே, கலந்தாய்வு முறையில் இல்லாமல், இருக்கிற இடங்களுக்கு மாணவர்களை தனியார் கல்லூரிகளே நேரடியாக சேர்த்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கடந்த 7-ந்தேதி உயர் கல்வித்துறை செயலாளர், இயக்குனர், மாணவர்கள் சேர்க்கை குழு தலைவர் உள்ளிட்டோருக்கு மனு கொடுத்தேன். இதுவரை பதில் வரவில்லை.

இந்த நிலையில், வருகிற 27-ந்தேதி என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. எனவே, என் மனுவை பரிசீலிக்கவும், கலந்தாய்வு குறித்து தகுந்த உத்தரவை இந்த ஐகோர்ட்டு பிறப்பிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர், இந்த மனு மீதான விசாரணையை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News