செய்திகள்

தமிழ்நாடு, கேரளாவில் டெங்கு பரவுதல் அதிகரிப்பு

Published On 2017-06-22 05:40 GMT   |   Update On 2017-06-22 05:40 GMT
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அதிக அளவில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இரு மாநிலங்களிலும் ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தி அதிகமாக இருப்பதால் இந்நோய் அதிகமாக பரவுவதாக தெரிய வந்துள்ளது.
சென்னை:

ஏடிஸ் எனும் கொசு மூலம் டெங்கு காய்ச்சல், சிக்குன் குன்யா போன்ற நோய் பரவுகிறது.

இந்த கொசுக்கள் நன்னீரில் வாழக்கூடியவை யாகும். வீடுகளில் இருக்கும் மூடப்படாத தண்ணீரில் இவை உயிர் வாழ்வதுடன் நோய்களையும் பரப்புகிறது.

இந்த கொசுக்கள் வெப்ப மண்டல நாடுகளில் காணப்படுகின்றன. அதன்படி இந்தியாவில் குறிப்பாக தென் மாநிலங்களில் இந்த கொசுக்களினால் அதிக பாதிப்பு ஏற்படுகிறது.

தற்போது தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அதிக அளவில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இரு மாநிலங்களிலும் ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தி அதிகமாக இருப்பதால் இந்நோய் அதிகமாக பரவுவதாக தெரிய வந்துள்ளது.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இதுவரை 3,259 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதில் 2 பேர் உயிர் இழந்துள்ளனர். கடந்த ஆண்டு 2500 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதில் 5 பேர் இறந்தனர்.

தமிழ்நாட்டை ஒப்பிடும் போது கேரளாவில்தான் அதிக பாதிப்பு உள்ளது. அங்கு இந்த ஆண்டு 4735 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் கேரளாவில்தான் டெங்கு காய்ச்சல் பரவுதல் அதிகமாக உள்ளது. நாட்டில் மொத்த டெங்கு பாதிப்பில் இந்த இரு மாநிலங்களின் பங்கு 70 சதவீதமாக உள்ளது.

டெங்கு நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக சென்னையில் நேற்று தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் பொது சுகாதார அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த பொது சுகாதார இயக்குனர் குழந்தைசாமி கூறியதாவது:-

டெங்கு நோயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தண்ணீரை அதிக நாட்கள் தேக்கி வைத்திருக்க வேண்டாம். காய்ச்சல் ஏற்பட்டால் அதை அலட்சியப்படுத்தாமல் உட னடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அதை தடுப்பதற்காக சுகாதார ஆய்வாளர்கள் அனைத்து இடங்களிலும் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

தண்ணீர் தேங்கக்கூடிய பாத்திரங்கள் மற்றும் பொருட்களை வெளியில் வைக்க வேண்டாம். அவற்றில் தண்ணீர் தேங்கி ஏடிஸ் கொசு உற்பத்தியாகும்.

கேரளாவில் தற்போது மழை பெய்து வருவதால் அதன் காரணமாக அதன் எல்லை பகுதியான தமிழக மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதை கண்காணிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கேரளாவை ஒட்டி உள்ள தமிழக பகுதியான கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, தேனி, கடையநல்லூர், கன்னியாகுமரி, சங்கரன் கோவில் ஆகியவற்றில் அதிக அளவில் டெங்கு காய்ச்சல் பரவி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News